Pages

Friday, 9 June 2017

மயக்கவியல் மருத்துவம் (Anaesthesia) - முன் மயக்கவியல் பரிசோதனை (Pre Anaesthetic assessment)


மயக்கவியல் மருத்துவம் (Anaesthesia) 
முன் மயக்கவியல் பரிசோதனை (Pre Anaesthetic assessment)
.
அறுவை சிகிச்சைகளில் Elective Surgery மற்றும் Emergency Surgery என்று இருவகைகள் உண்டு. ஒருவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை தேவைப்படும்போது, அது Emergency Surgery என்றும் (உதாரணம்: விபத்துகளில் அடிபடுவதால் உடனடியாக செய்ய வேண்டிய சர்ஜரிகள், மகப்பேறு வலி வந்து நார்மல் டெலிவரி பண்ணமுடியாத நிலையில் செய்யப்படும் சிசரியேன்) மாறாக,........“அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் ஆனால் அது உடனடியாக இல்லாமல் ஒரு குறிப்பிட்ட காலத்தில்“ .....பண்ணுவதாக தீர்மானிக்கப்படுவதை (உம். கர்ப்ப பையில் உள்ள கட்டிக்காக கர்ப்பபை நீக்க அறுவை சிகிச்சைகள்) Elective Surgery என்றும் அழைப்பார்கள்.
.
இந்த பதிவானது, Elective Surgery-யும் அதற்கு  மயக்க மருத்துவம் கொடுப்பதற்கு முன்னால் உள்ள நடைமுறைகளை பற்றியதாகும்.
.
மேலும், ”அறுவை சிகிச்சை மருத்துவர் எனக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என்று கூறிய பிறகும், ஏன் மயக்கவியல் மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்வதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றார்?” என்பதற்கான விடையை இந்த பதிவில் பார்ப்போம்.
.
Elective Surgery-க்கு முன்னர் நோயாளியானவர் கட்டாயம் மயக்கவியல் மருத்துவரால் 'முன் மயக்கவியல் பரிசோதனை" செய்யப்படவேண்டும். இதை Pre Anaesthetic assessment என்று அழைப்பார்கள். நோயாளி இருக்கும் மருத்துவமனையில், மயக்கவியல் மருத்துவர் பரிசோதிப்பற்கான பரிசோதனைகளை செய்து தயாராக வைத்திருப்பார்கள். மயக்கவியல் மருத்துவரானவர் அந்த பரிசோதனைகளின் முடிவுகளை ஆய்வு செய்து, பின்னர் நோயாளிக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய சம்பந்தமான நோய்கள், நுரையீரல் சம்பந்தமான நோய்கள் (சளி, ஆஸ்துமா) இருக்கின்றதா என்பதை பரிசோதிப்பார். நோயாளிக்கு வேறு ஏதாகிலும் மூளை சம்பந்தமான (வலிப்பு) நோய்கள் இருக்கின்றதா போன்ற விபரங்களை நோயாளியிடம் கேட்டு அறிவார். ஏதாகிலும் நோய்களுக்காக நோயாளியானவர் ஏற்கனவே மருந்து மாத்திரைகள் சாப்பிட்டவரா? அல்லது தற்போதும் சாப்பிட்டு கொண்டிருக்கின்றாரா? மேலும் இதற்கு முன் நோயாளிக்கு அறுவை சிகிச்சைகள் எதாகிலும் செய்யப்பட்டிருக்கின்றதா, மேற்படி அறுவை சிகிச்சைகளின்போது ஏதாகிலும் பிரச்சனைகளை நோயாளி சந்தித்திருக்கின்றாரா என்ற விபரங்களை மயக்கவியல் மருத்துவர் நோயாளியிடம் கேட்டறிவார்.

இவ்வாறு மயக்கவியல் மருத்துவர் கேட்கும் வினாக்களுக்கு நோயாளியானவர் எதையும் மறைக்காமல் பதில் அளிப்பது மிக மிக அவசியம். நோயாளியானவர் முந்தைய நோய்களின் விபரங்களை மயக்கவியல் மருத்துவரிடம் இருந்து மறைத்தால், மயக்கவியல் மருத்துவர் மயக்கம் கொடுக்கும்போது, முறையான மயக்க மருத்துவத்தை கையாள முடியாமல் போய்விடுவதால் அது நோயாளியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். உதாரணமாக நோயாளியின் வாழ்நாளில் எப்போது வலிப்பு நோய் வந்திருந்தாலும் (சிறு குழந்தையாக இருந்தபோது வந்திருந்தாலும்) அதை நோயாளியும் அவரது உறவினர்களும் மயக்கவியல் மருத்துவரிடம் அந்த விஷயங்களை மறைக்காமல் கூறவேண்டும். ஏனெனில் ஏற்கனவே நோயாளிக்கு வலிப்பு நோய் வந்திருக்கின்றது என்று மயக்கவியல் மருத்துவருக்கு தெரியவந்தால், அதற்கேற்ப மயக்க மருத்துவத்தை அறுவை சிகிச்சையின்போது உபயோகப்படுத்துவார். தேவைப்பட்டால், மயக்கம் மருத்துவம் கொடுப்பதற்கு முன்னர் ஒரு மூளை நரம்பு சிறப்பு மருத்துவரின் அபிப்ராயத்தை பெற்றுக்கொள்வார். மயக்க மருத்துவரிடம் நோயாளியின் நோய்களை, நோயாளி மற்றும் அவரது உறவினர்கள் மறைப்பது என்பது நோயாளியின் உயிருக்கு ஆபத்தாக முடியம்
.
நோயாளியானவருக்கு முதுகு தண்டில் மயக்க மருந்து (Spinal anaesthesia) செலுத்தி மயக்கம் கொடுக்க தீர்மானித்த நிலையிலும், நோயாளியானவர் பொது மயக்க மருந்து (General Anaesthesia) கொடுக்கும் அளவிற்கு தகுதியானவரா என்று பரிசோதனை செய்வார். பொது மயக்கம் கொடுக்கும் முறையில், சுவாசக்குழாயில் ட்யுப் போடுவதற்கு ஏதுவாக நோயாளியின் வாய் திறப்பதற்கு கடினமாக உள்ளதா (Difficult intubation) என்பதை அறிவதற்காக வாயை திறந்து காண்பிக்க சொல்லி சோதனை செய்வார். பின்னர் மயக்கவியல் மருத்துவரானவர், மயக்க மருத்துவத்தில் உள்ள சிக்கல்களையும் நோயாளிக்கு எடுத்துரைப்பார். அதன் பிறகு, நோயாளியானவர் தனக்கு மயக்க மருத்துவம் கொடுப்பதற்கு அவரது சம்மதத்தை தெரிவிக்கும் வகையில் ஒரு ஒப்புதல் படிவத்தில் கையொப்பம் இடவேண்டும். அதில் நோயாளியின் உறவினர்கள் இருவர் சாட்சி கையொப்பம் இடவேண்டும்.
.
நோயாளியின் வயது, அவரின் மற்ற பரிசோதனைகளின் முடிவுகளை கொண்டு, தேவைப்பட்டால் மயக்கவியல் மருத்துவரானவர், கூடுதலாக நோயாளியின் இதயம் வேலை செய்யும் தன்மையை அறிய Echo Cardiogram மற்றும் இதர பரிசோதனைகளுக்கு பரிந்துரை செய்வார். அதன் முடிவுகள் அடிப்படையில், நோயாளியானவர் மயக்க மருந்து கொடுக்கும் வகையில் தகுதி நிலையில் இருந்தால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யலாம் (Fit for Surgery) என்று மயக்கவியல் மருத்துவர் பரிந்துரைப்பார். அதன் பின்னரே நோயாளியின் அறுவை சிகிச்சை எந்த நாளில் நடைபெறும் என்பது தீர்மானிக்கப்படும்.
.
மயக்கவியல் மருத்துவர் பரிசோதிக்கும்போது, நோயாளிக்கு அதிக அளவிலான இரத்த அழுத்தம் இருந்தால், நோயாளியை அந்த பிரச்சனையை சரி செய்ய அல்லது அந்த பிரச்சனைக்கான அபிப்ராயம் பெற ஒரு பொது மருத்துவரிடம் அனுப்புவார். வலிப்பு போன்ற நோய்கள் இருந்தால், அதை சரிசெய்ய அல்லது அந்த பிரச்சனைக்கான அபிப்ராயம் பெற மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவரிடம் அனுப்பி வைப்பார். அதுபோலவே, நோயாளிக்கு மற்ற இதய சம்பந்தமான நோய்கள் இருந்தால், அந்த பிரச்சனைக்கான அபிப்ராயத்தை தெரிந்து கொள்ள இதய சிறப்பு மருத்துவரிடம் அனுப்புவார். ஆக, மயக்கவியல் மருத்துவர் அவரின் பரிசோதனைகளில் அடிப்படையில், நோயாளிக்கு மற்ற நோய்கள் இருக்கும்போது, தேவைப்பட்டால், பிறத்துறை மருத்துவர்களளின் அபிப்ராயம்/கருத்தை பெற்ற பிறகே அந்த நோயாளிக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு தகுதியானவரா என்பதை தீர்மானிப்பார்.
.
ஒரு நோயாளியானவர் வலிப்பு நோய்க்காக மாத்திரை சாப்பிட்டு கொண்டிருக்கின்றார். அவர் அறுவை சிகிச்சைக்காக ஒரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த நிலையில், அங்கே மூளை மற்றும் நரம்புக்கான (D.M. Neuro) சிறப்பு மருத்துவர் இல்லையெனில், நோயாளின் நலன் கருதி, நோயாளியை அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிக்கு சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள பரிந்துரைப்பார். ஏனெனில் அங்கு மூளை மற்றும் நரம்புக்கென தனித்துறை செயல்படுவதால், அறுவை சிகிச்சை நேரங்களில் வலிப்பு வந்தாலும், மேற்படி துறை மருத்துவர்கள் உடனடியாக அழைக்கப்பட்டு நோயாளிக்கு வைத்தியம் செய்யமுடியும்.
.
இதுபோலவே ஒரு நோயாளிக்கு இதயத்தில் பிரச்சனை என்று Echo Cardiogram-ல் அறியப்பட்டு, அந்த நோயாளி வந்திருக்கும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இதய நோய்க்கான சிறப்பு மருத்துவர் (D.M. Cardiology) இல்லையெனில், அந்த நோயாளியை அருகில் உள்ள மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மயக்கவியல் மருத்துவர் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்வார். ஏனெினல் அங்கு இதய நோய்க்கென தனித்துறை செயல்படுகின்றது. அறுவை சிகிச்சை நேரங்களில் இதய செயல்பாடுகளில் பிரச்சனை வந்தால், மேற்படி துறை மருத்துவர்கள் உடனடியாக அழைக்கப்பட்டு நோயாளிக்கு தகுந்த வைத்தியம் கொடுப்பார்கள். சில சிக்கலான இதய நோய் உள்ளவர்களுக்கு, அறுவை சிகிச்சை நடக்கும்பொது, இதய நோய் சிறப்பு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அரங்குகளில், அறுவை சிகிச்சை நடக்கும்போது கூடவே இருப்பார்கள். இதுபோலவே, நோயாளியின் நலன் கருதி, மயக்க மருத்துவர் சில சிக்கலான கேஸ்களை அறுவை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவ கல்லுாரிக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பார்.
.
ஒரு மயக்கவியல் மருத்துவருக்கு நோயாளியின் நலன் கருதி, என்ன வகையான மயக்க மருத்துவம் அளிக்க வேண்டும், எப்போது அவரை அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்ய வேண்டும், அந்த மருத்துவமனையில் மயக்க மருத்துவம் அளித்து அறுவை சிகிச்சை செய்வது சரியா அல்லது மற்ற பெரிய மருத்துவமனைக்கு (அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு) பரிந்துரை செய்வது சரியானதா என்று அனைத்தையும் தீர்மானிக்க முழு அதிகாரம் உண்டு. இந்த அதிகாரத்தில் நுழைய மற்ற துறை மருத்துவர்களுக்கோ அல்லது மருத்துவமனை நிர்வாகத்திற்கோ எந்தவித அதிகாரமும் இல்லை.
.
இன்று மாவட்ட அரசு தலைமை மருத்துவனைகளுக்கு அறுவை சிகிச்சைக்கு வருபவர்கள் எல்லோரும், அங்குள்ள அறுவை சிகிச்சை மருத்துவர் நோயாளியின் நோய்க்கு அறுவை சிகிச்சை செய்யலாம் என்று கூறியவுடன், உடனடியாக அறுவை சிகிச்சை நடந்துவிடும் என்று நினைக்கின்றார்கள். ஆனால், அறுவை சிகிச்சை மருத்துவர்சரிஎன்ற சொன்ன பிறகும், இவர்கள் மயக்கவியல் மருத்துவரை சந்தித்துஅறுவை சிகிச்சைக்கு தகுதியானவர்என்று தகுதியை பெற்ற பிறகுதான் நோயாளிக்கு அறுவை சிகிச்சை நடக்கும்.
..
மயக்க மருத்துவம் என்பது அறுவை சிகிச்சையின் போது முக்கிய பங்கு வகிக்கின்றது. மயக்க மருந்துகளால் அறுவை சிகிச்சையின்போது ஒருவருக்கு வலியின்மையை உருவாக்கும்போது, அறுவை சிகிச்சை முடிந்தவுடன் அவர் மயக்க நிலையில் இருந்து திரும்ப அழைக்கப்படுதலுக்காக (recovery from Anaesthesia) முறையான மயக்க மருந்துகள் கொடுப்பதற்கு, அறுவை சிகிச்சைக்கு முன்னர் நோயாளிக்கு அனைத்து பரிசோதனைகளையும் செய்து நோயாளிக்கு இருக்கும் நோய்களை கட்டுப்படுத்துவது என்பது மிக அவசியம்.
.
இவ்வாறு கட்டுப்படுத்திய பிறகு, மயக்க மருந்து வழங்கும் முறைதான் நோயாளியின் உயிருக்கு பாதுகாப்பானது. இதை இன்னும் நோயாளிகள் மற்றும் அவரது உறவினர்களும் புரிந்து கொள்ளுவதில்லை. நோயாளியானவர் தன் உடலில் பல பிரச்சனைகளை வைத்திருப்பார். அது அவருக்கே தெரியாது. அறுவை சிகிச்சைக்காக மயக்க மருத்துவரை சந்திக்கும்போதுதான் அவர் உடம்பில் இருக்கும் பல பிரச்சனைகள் மயக்க மருத்துவரால் கண்டுபிடிக்கப்படும். மயக்கவியல் மருத்துவர் நோயாளிக்கு சர்க்கரை நோய் அல்லது இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருப்பதை கண்டுபிடித்து, அதற்கான சிறப்பு மருத்துவர்களின் அபிப்ராயத்திற்கோ அல்லது அதற்கான மருந்துகளை சாப்பிட்டு ஒரு வாரம் கழித்து திரும்பவும் மயக்கவியல் மருத்துவரை வந்து பாருங்கள் என்று நோயாளியிடம் கூறினால், அறுவை சிகிச்சைக்கு மயக்க மருத்துவர் தடையாக இருக்கின்றாரே என்று நோயாளியும் அவரது உறவினர்களும் எரிச்சலடைவார்கள்.
.
சில நோயாளிகளுக்கு இரத்த அழுத்த நோய் இருக்கும். மாத்திரை எடுத்து கொண்டிருப்பார்கள். அடிக்கடி மருத்துவரை சென்று பார்க்க மாட்டார்கள். மயக்க மருத்துவர்உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கின்றதுஎன்று கூறினால், “இல்லை, நான் ஒழுங்காக மாத்திரை சாப்பிட்டு வருவதாத கூறுவார்கள். கடைசியாக பொது மருத்துவரை எப்போது பார்த்தீர்கள் என்று கேட்டால்இரண்டு வருடத்திற்கு முன் பார்த்தேன். அவர் எழுதி கொடுத்த மாத்திரையை ஒழுங்காக சாப்பிட்டு வருகின்றேன்என்று கூறுவார்கள். மயக்க மருத்துவ முன் பரிசோதனைக்கு வரும்பொதுதான் நோயாளிகளின் பல நோய்கள் வெளியே வரும் அல்லது அவர்கள் நோயிற்கு முறையாக வைத்தியம் செய்யாமை என்பது வெளியே வரும்.
.
நோயாளிக்கு தனது உயிர்மேல் அக்கறை இருந்தால், மயக்கவியல் மருத்துவர் அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர் என்று சொல்லும் வரை மயக்க மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டு நடந்துதான் ஆகவேண்டும். மேலும், மயக்கவியல் மருத்துவர் ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் மயக்கம் கொடுத்து அறுவை சிகிச்சை செய்வது தங்கள் உயிருக்கு ஏற்றதல்ல, ஆகவே பெரிய மருத்துவமனையில் அல்லது அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தால் அதை தனது நலன் கருதி நோயாளியும் அவரது உறவினர்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
.
இன்று மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ஒரு நாளில் 10-ல் இருந்து 15 வரையிலான பெரிய அறுவை சிகிச்சைகள் நடைபெறுகின்றது. பின்னர் ஏன் மயக்கவியல் மருத்துவர் ஒரு குறிப்பிட்ட நோயாளிக்கு மட்டும் அங்கு அறுவை சிகிச்சை செய்ய மறுக்கின்றார் என்பதை நோயாளி சிந்தித்து பார்க்க வேண்டும். மயக்க மருத்துவம் கொடுப்பதற்கு முன் நோயாளியின் நிலை எப்படி நன்றாக இருந்ததோ, அதுபோலவே அறுவை சிகிச்சைக்கு பின்னரும் நன்றாக நோயாளியை மயக்கத்தில் இருந்து எழுப்ப வேண்டும் என்பதான் மயக்கவியல் மருத்துவரின் முக்கிய பணியாகும்.
.
நோயாளிக்கு அந்த மருத்துவமனையில் மயக்கம் கொடுப்பதற்கு ஏற்றவாறு நோயாளியின் உடல்நிலை இல்லை மேலும் அவருக்கு அறுவை சிகிச்சையின்போது பிரச்சனை ஏற்படின் (இதய சம்பந்தமாக) அதற்கான சிறப்பு மருத்துவர்கள் இல்லையெனில், நோயாளியின் நலன் கருதியே அவரை அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மயக்கவியல் மருந்துவர் பரிந்துரை செய்கின்றார் என்பதை நோயாளியும் அவரது உறவினர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
.
யார் என்றே தெரியாத மற்ற ஒரு நோயாளிக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யும்போது, ஒருவருக்கு (உங்களுக்கு) மட்டும் ஏன் மறுக்கப்படுகின்றது என்பதை சற்று யோசித்து பார்க்க வேண்டும். அது நோயாளியின் (உங்களின்) நன்மைக்காவே மயக்கவியல் மருத்துவர் கூறுகின்றார் என்பதை நோயாளியும் அவரது உறவினர்களும் உணரவேண்டும்.
.
சில நேரங்களில், நோயாளிக்கு இதயத்தில் பிரச்சனைகள் இருக்கும்போது, மயக்க மருத்துவர் நோயாளியை அருகில் உள்ள மருத்துவ கல்லுாரிக்கு சென்று, அங்குள்ள இதயப் பிரிவில் காண்பித்து, இதய சிறப்பு மருத்துவர்களின் அபிப்ராயத்தை கேட்டு வர அனுப்பிவைப்பார். அதன்படி இதய சிறப்பு மருத்துவர்களிடம் இருந்து பெறப்பட்டு வரும் அபிப்ராயமானது மயக்கவியல் மருத்துவருக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருந்தால், அந்த நோயாளிக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்ய சம்மதம் அளிப்பார். ஆக, மயக்கவியல் மருத்துவர் நோயாளியின் நலன் கருதி, அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று சிறப்பு மருத்துவர்களை சந்தித்து அவர்களின் அபிப்ராயத்தை பெற்று வரச்சொன்னால், நோயாளியும் அவரது உறவினர்களும் மயக்கவியல் மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். சில நேரங்களில், சிறப்பு மருத்துவரின் அபிப்ராயத்திற்கு பிறகும் நோயாளியின் நலன் கருதி நோயாளியை மயக்கவியல் மருத்துவர் அருகில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரிக்கு அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைப்பார்.
.
மயக்கவியல் மருத்துவரால் நோயாளியின் அறுவை சிகிச்சை தாமதப்படுவது என்பது நோயாளியின் நலனுக்காகவே என்பதை, நோயாளியும் அவரது உறவினர்களும் புரிந்து கொள்ள வேண்டும்
.

(பொது மக்களுக்கு மயக்கவியல் மருத்துவத்தை பற்றி ஒரு புரிதலை உருவாக்க, திரட்டப்பட்ட  தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டதுதவறுகள் இருந்தால், தயவு செய்து சுட்டி காட்டவும், உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் - லி.லீனஸ்)


No comments:

Post a Comment