Pages

Saturday 13 January 2024

மாநில தகவல் ஆணையங்கள் அனைத்திலும் hybrid hearing முறையில் விசாரணை

  

IN THE SUPREME COURT OF INDIA

CIVIL ORIGINAL JURISDICTION

 

Writ Petition (Civil) No. 360 of 2021

 

 Kishan Chand Jain …Petitioner

 Versus

 Union of India & Ors …Respondents

 

மனுதாரர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 32-ன் கீழ் மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் அதிகார வரம்பை இந்த நீதிப்பேராணையின் வாயிலாக கோருகிறார். பெரும்பாலான மாநில தகவல் ஆணையங்கள்,  மாநிலங்களின் தலைநகரங்களில் அமைந்து, அங்கு மட்டுமே அதன் நடவடிக்கைகளை நடத்துவதால், அங்கு சென்று வழக்கு விசாரணையில் கலந்து கொள்ளும் மனுதாரருக்கு அதிக செலவினங்களை ஏற்படுத்துகின்றது. எனவே, மனுதாரர்கள் மாநில தகவல் ஆணையத்தின் வழக்கு விசாரணையில் நேரடியாக ஆஜராவதற்கு பதிலாக, மனுதாரரின் விருப்பத்தின்பேரில்,  hybrid hearing மூலமாக ( நேரடியாக விசாரணையில் கலந்து கொள்ளவது, மற்றும் மாற்றாக பிற முறையிலான,  வீடியோ கான்பரன்சிங், வாட்ஸ்ஆப் வீடியோ மூலமாக கலந்து கொள்வது) வழக்கில் ஆஜராக அனுமதிக்கப்படவேண்டும் என்றும் மற்றும் பிற பரிகாரங்கள் கோரியும் இந்த நீதிப்பேராணையை தாக்கல் செய்கின்றார். 

இந்த நீதிப்பேராணையில்,  ஒவ்வொரு மாநில தகவல் ஆணையமும் அவர்கள் தரப்பிலிருந்து மேற்படி hybrid hearing அந்த மாநில தகவல் ஆணையத்தின் நடைமுறையில் இருக்கின்றதா என்பதை  பற்றிய ஒரு அபிடவிட்டை மாண்புமிகு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றார்கள். அவ்வாறேமாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையமும் hybrid mode முறையானது (அதாவது நேரடி விசாரணை முறையுடன் virtual hearing முறையும் சேர்ந்தது) நடைமுறையில் உள்ளதாக அவர்களது அபிடவிட்டில் கூறியுள்ளார்கள். இது ஆணையின் பாரா 14-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இந்த வழக்கில், மாண்புமிகு உச்சநீதிமன்றமானது பாரா 23-ல் கீழ்கண்டவாறு ஆணையிடுகின்றது. 

 23. In view of the above discussion, we are of the considered view that access to  the Information Commissions is integral to securing the right to information,  which is a necessary concomitant of right to equality under Article 14, the  freedom of speech and expression under Article 19(1)(a) of the Constitution,  and the right to life under Article 21. Accordingly, we direct that all SICs across  the country must provide hybrid modes of hearing to all litigants for the  hearing of complaints as well as appeals. All SICs must provide an option for  availing of a hybrid mode of hearing which shall be at the discretion of the  applicant, or as the case may be, the appellant. The links for availing of the  option must be stipulated in the daily cause list of the Information  Commissions across the country. This shall be operationalized no later than  by 31 December 2023.

 மேற்படி ஆணையின் பாரா 14-ல்  தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் hybrid hearing இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும்,  பாரா 23-ல் ஆணையிட்டவாறு, இந்த நடைமுறையானது அனைத்து மாநில தகவல் ஆணைங்களால்  31.12.2023க்குள் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையிலும்,  இவ்வாறான விசாரணை முறையில் எந்த முறையை தேர்ந்தெடுப்பது என்பது மனுதாரர் மற்றும் மேல்முறையீட்டாளரின் விருப்பம் என்ற முறையிலும்,  மாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையமானது மனுதாரரர் மற்றும் மேல்முறையீட்டாளரின்  விருப்பத்தின்பேரில், விசாரணைக்கு  hybrid mode hearing  (நேரடியாகவோ (Physical hearing)  அல்லது வீடியோ கான்பரன்சிங், வாட்ஸ்ஆப் வீடியோ மூலமாகவே (virtual hearing))  கலந்து கொள்ள அனுமதிக்கும் என்றே புரிதல் கொள்ள  வேண்டும்.  

ஆகவே, 31.12.2023-க்கு பிறகு மேற்படி மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படிமனுதாரர்/மேல்முறையீட்டாளர் வழக்கு விசாரணையில் virtual hearing முறையில் கலந்து கொள்வதை தேர்ந்தெடுத்து கொள்ள மேற்படி மாண்புமிகு உச்சநீதிமன்ற ஆணையானது வழிவகை செய்வதால்,    விசாரணைக்கான அறிவிப்பினை மாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் பெற்றவுடன்,  மனுதாரர்/மேல்முறையீட்டாளரானவர் தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம், virtual hearing-ல் கலந்து கொள்ள இருப்பதை முன்கூட்டியே தெரியப்படுத்துவது என்பது தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு அவ்வாறான நடைமுறைக்கு அவர்களை தயார் படுத்திகொள்ள வசதியாக இருக்கும்.

மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணையானது தகவல் அறியும் உரிமை சட்டத்தினை பயன்படுத்துவோருக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஒரு சிறப்பான ஆணையாகும். இந்த ஆணையால், மனுதாரர் சென்னைக்கு சென்று வழக்கு விசாரணையில் கலந்து கொள்ளும் வகையிலான போக்குவரத்து செலவினங்கள் முற்றிலுமாக தவிர்க்கப்படும். (இந்த hybrid hearing நடைமுறையானது ஒன்றும், மாண்புமிகு தமிழ்நாடு தகவல் ஆணையத்திற்கு புதிதானது அல்ல. கொரோனா காலத்தில் வாட்ஸ்ஆப் வீடியோ மூலமாக தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர்களால் இந்த நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்பட்டது)

 (பொறுப்பு விலகல்- மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் ஆணையின் சில பகுதிகளுக்கு மட்டுமே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் இந்த ஆணையை பற்றி தெரிந்து கொள்ள விருப்பப்படுபவர்கள், இணையத்தளத்தில் இருக்கும் இந்த ஆணையை படித்து அறிந்து கொள்ள கோரப்படுகின்றார்கள்)


Thursday 20 July 2023

மருத்துவ சேவைக் குறைபாடு வழக்கு

 நான் ஆலோசனை கூறிய ஒரு வழக்கு.

.
காலையில் 11 மணிக்கு மருத்துவமனைக்கு கருக்கலைப்பிற்காக ஒரு பெண் செல்லுகின்றார். மதியம் 4 மணி அளவில் அவருக்கு உடல்நலம் குன்றி, அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு இறந்துவிடுகின்றார். கருக்கலைப்பு செய்ததனால் ஏற்பட்ட கவனக்குறைவால் அந்த பெண் இறந்தாகத்தான் மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு. ஆனால், அந்த பெண்ணிற்கு நடந்த உடற்கூராய்வில், கரு கலைப்பு நடைபெறவில்லை என்று அறிக்கை தாக்கல் செய்யப்படுகின்றது. என்ன வகையில் புகார் சொல்லப்பட்டதோ, அந்த புகாரின் அடித்தளமே நொருங்கிவிட்டது. இனி இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் வாதாட ஒன்றுமே இல்லை என்ற நிலையிலும், Reserved for Judgment என்ற நிலையில், நான் அமெரிக்காவில் இருக்கும்போது எனது ஆலோசனைக்கு, வருகின்றது. Summary proceedings என்று வழக்கினை re-open செய்ய மறுக்கப்பட்ட நிலையில், மாண்பமை தேசிய நுகர்வோர் ஆணையத்தின் ஆணையை சுட்டிக்காட்டி அந்த வழக்கு re-open செய்யப்பட்டு மருத்துவர் குறுக்கு விசாரணை செய்யப்பட்டு, கூடுதல் எழுத்துமூல வாதுரை தாக்கல் செய்யப்பட்டு, அதன்அடிப்படையில் நுகர்வோர் குறைதீர் ஆணையமானது மருத்துவ சேவை குறைபாடு என்று ரூ.10 இலட்சம் இழப்பீடு வழங்க ஆணையிட்டது. இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் தரப்பில் காலையில் நோயாளி மருத்துவமனைக்கு வரும்போதே, நல்ல நிலையில் இருந்தார் என்று அவர்களது எதிர்உரையில் ஒப்புக்கொண்டுள்ளார்கள். ஆகையால், நல்ல நிலையில் இருந்த நோயாளியின் உடல்நிலை மோசமான நிலைக்கு சென்றதற்கான காரணத்தையும் மற்றும் இறப்பிற்கான காரணத்தையம் மருத்துவரே Res ipsa loquitur என்ற முதுமொழியின் அடிப்படையில் நிருபிக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தே இந்த வழக்கில் வெற்றிபெற முடிந்தது. மருத்துவ சேவைக்குறைபாடு வழக்குகளை எதிர்கொள்ள வேண்டுமென்றால், அது சார்ந்த அதிக அளவிலான ஆணைகளை படிக்க வேண்டும். எதெல்லாம் மருத்துவ சேவை குறைபாட்டில் வரும் என்பதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

மருத்துவ சேவைக் குறைபாடு என்பது நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையங்களின் வரம்பிற்குள் வருவது சரியா?

மருத்துவ சேவைக் குறைபாடு என்பது நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையங்களின் வரம்பிற்குள் வருவது சரியா?

.
ஒவ்வொரு துறையில் பணிபுரிபவர்களிடம், அந்தத் துறைச்சார்ந்த பொறுப்புடைமை இருக்க வேண்டும். அவ்வாறான பொறுப்புடைமை ஏற்படுத்ததான் அரசாங்கம் பல சட்டங்களை இயற்றி வருகின்றது. உதாரணமாக அரசு அலுவலர்களிடையே பொறுப்புடைமையை ஏற்படுத்துவதற்காகத்தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. (இந்தச் சட்டமானது தகவல் பெறுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட சட்டமாக பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்). ஒரு தொழிலில் ஈடுபடுவர்கள் பொறுப்புடைமையுடன் செயல்படவில்லை என்றால், உரிய அதிகார அமைப்புடன் முறையீட்டு அவர்களைப் பொறுப்புடைமையுடன் செயல்பட வைப்பது என்பது அவசியம் இல்லையெனில் அந்த தொழில் மாண்பமை குறைந்துவிடும். அதற்காக, ஒரு இலகுவான சட்டமும் அவசியம். அவ்வாறு எந்தத் தொழிலும் உள்ள சேவைக் குறைபாடுகளைக் களைய உருவாக்கப்பட்ட சட்டம்தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமாகும்.
.
வழக்கறிஞரால் பாதிப்பு அடைந்த ஒருவர், சுயவழக்காடியாகச் சட்டங்களையும் நீதிமன்ற நடைமுறைகளையும் தெரிந்து கொண்டு அவரது வழக்கைத் தொடரலாம். ஆனால், மருத்துவத் துறையில் அது சாத்தியமா? ஒருவருக்கு உடல்ரீதியான மருத்துவ பிரச்சனை என்றால், அவர் கட்டாயம் மருத்துவரை அணுகி மட்டுமே தீர்வு காண முடியும் என்பதால், மருத்துவர்களின் தொழிலில் அதிகப்பட்சப் பொறுப்புடைமை என்பது அவசியமாகின்றது. அந்தப் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்காக பொது மக்களின் கைவசம் உள்ள சட்டம்தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமாகும். நமது நாட்டில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையோடு, அவர்கள் மீதான வழக்குகளை எடுத்துக் கொண்டால், அது மிக குறைவான எண்ணிக்கையிலானது. அதற்கு முக்கிய காரணம் இன்றும், மக்கள் மருத்துவரை தெய்வமாக நினைப்பதும், மருத்துவர் வேண்டுமென்றே தப்பு செய்திருக்க மாட்டார் என்ற மக்களின் அதீத நம்பிக்கையாகும். “மருத்துவர் வேண்டுமென்றே தப்பு செய்திருக்க மாட்டார்“ எனும் நம்பிக்கைச் சில நேரங்களில் சில மருத்துவர்களால் தகர்க்கப்படும்போது, குறிப்பாக Gross Negligence என்ற வகையான மருத்துவ சேவை குறைபாடுகளில், (நோயாளி இறக்கும்போது) வேறு வழியின்றி பொது மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்ததை நாட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.
.
Somraj Sen & Anr. Vs. Kothari Medical Centre & 7 Ors (2023) என்ற வழக்கில் மருத்துவர் ஒருவருக்கு ‘D & C’ laparoscopic procedure செய்யும்போது மாரடைப்பு வந்து இறந்துவிடுகின்றார். இதில் மருத்துவர்கள் அளித்த சேவையில் எந்தவிதக் குறைபாடு இல்லை எனவும், ஆனால் மருத்துவமனை சேவைக் குறைபாடுடன் செயல்பட்டதாக 1.25 கோடி இழப்பீடு வழங்க மத்திய நுகர்வோர் ஆணையம் ஆணையிட்டுள்ளது. இங்கு ஒரு விடயத்தைக் கவனிக்கவும், இறந்தவர் மருத்துவர் என்பதனால், அவரது குடும்பத்தார், மருத்துவர் மீதோ அல்லது மருத்துவமனையின்மீதோ வழக்காடமல் இருந்தார்களா? மருத்துவ சேவைக் குறைபாடு இருந்ததாகப் புகார் செய்து, மருத்துவரின் குடும்பமே நிவாணம் பெற முடிந்த நிலையில், ஒரு சாமானியன் மருத்துவ சேவைக் குறைபாட்டினை எதிர்கொள்ளும்போது, நுகர்வோர்க் குறைதீர் ஆணையங்களை அணுகும் வகையில் மருத்துவ சேவைக் குறைபாட்டினை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் வரம்பிற்குள் வைத்திருப்பது என்பது சரிதானே?
.
மருத்துவரோ அல்லது அவரது குடும்பத்தாரே மருத்துவ சேவைக் குறைபாடு என்று புகாரினை சமர்ப்பித்தால், அவர்கள் வழக்கில் பெரும்பாலும் வெற்றியடைகின்றார்கள். அதற்குக் காரணம், மருத்துவத்துறையை பற்றிய புரிதல் அவர்களுக்கு உள்ளது. மேலும், வழக்கிற்குத் தேவையான விபரங்களை மருத்துவத்துறையில் உள்ளவர்களே அவர்களுக்கு எடுத்துக்கொடுத்து உதவுவார்கள். ஆனால், மருத்துவ சேவைக் குறைபாட்டிற்காக நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையங்களை அணுகும் பொதுமக்கள் பலருக்கு மருத்துவத்துறையினை பற்றிய புரிதல் இல்லாமையால் பல நேரங்களில் வழக்கில் வெற்றிப் பெற முடிவதில்லை.
.
தேசிய நுகர்வோர் ஆணையத்தின் மருத்துவ சேவைக் குறைபாடு ஆணைகள் பெரும்பாலும் வடமாநிலத்தை சார்ந்ததாகும். அங்கு, பொது மக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும், மருத்துவ சேவைக் குறைபாடு வழக்குகளில் அதிக அளவில் புரிதல் உள்ளது அதற்கு இணையாக மருத்துவ சேவை குறைபாடுகளை தவிர்க்கும் வகையில் மருத்துவர்களுக்கும் அதிக அளவில் புரிதல் உள்ளது. மருத்துவ சேவைக் குறைபாடுகளை தவிர்க்கும் வகையில் பொறுப்புடமையுடன் செயல்பட மருத்துவர்கள் முன் வரவேண்டும் அதற்காக Medical Negligence Cases-களில் அதிக அளவிலான கலந்துரையாடல்களை நடத்த வேண்டும். அதில் மருத்துவர்கள் கலந்து கொண்டு, என்ன வகையான விடயங்கள் மருத்துவ சேவை குறைபாடுகளில் வருகின்றது என்பதை அறிந்து, அவற்றைத் தவிர்த்து பொறுப்புடமையுடன் செயல்பட முன் வரவேண்டும்.
.
இன்று பல மருத்துவமனைகளில், மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், அறுவைச் சிகிச்சைகளுக்கு முன்னர்க் குறைந்தபட்ட informed consent-கூட பெறுவதில்லை. அதுவே, மருத்துவர்களுக்கு எதிராகச் சேவை குறைபாடாகவும் மற்றும் Unfair trade practice-ஆக அமைகின்றது.
.
ஆகவே, நுகர்வோர்ப் பாதுகாப்பு சட்டத்தின் வரம்பிற்குள் மருத்துவ சேவைக் குறைபாடு இருக்கும் வரை, மருத்துவ சேவைக் குறைபாட்டினை தவிர்க்கும் விதமாக அனைத்து நடவடிக்கைகளையும் மருத்துவர்கள் எடுத்து, பொறுப்புடைமையுடன் செயல்படுவது அவசியமாகும்.

Friday 14 July 2023

தங்களது ஆதார் எண்ணுடன் எத்தனை வங்கி கணக்குள் இணைக்கப்பட்டுள்ளன?

 

நமது ஆதார் எண்ணுடன் நமது எந்தெந்த வங்கிகளின் கணக்குகள் இணைக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடியுமா என்ற விபரத்தினை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் ஆதார் துறையிடம் (uidai) கோரினேன். அவர்கள் https://resident.uidai.gov.in/bank-mapper என்ற இணையத்தளத்தில் ஆதார் கார்டு எண்ணை உட்புகுத்தி சோதித்து கொள்ளலாம் என்று பதில் அளித்துள்ளார்கள். அவ்வாறு செய்ய முயற்சித்ததில், எனது ஒரு வங்கி கணக்கின் இணைப்பை மட்டுமே காண்பிக்கின்றது. அனைத்து வங்கி கணக்குளின் இணைப்புகளை காட்டினால் மட்டுமே, நமது ஆதார் எண்ணானது தவறுதலாக பிற நபரின் வங்கி கணக்கில் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய முடியும்.
.
ஆனால், tafco.sancharsaathi.gov.in என்ற இணையத்தளத்தில் சென்று, தங்களது ஆதார் எண்ணுடன் எத்தனை மொபைல் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தினை காணலாம். (வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று தங்களது ஆதார் எண்ணுடன் தங்கள் கைவசம் வைத்திருக்கும் SIM-கள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளதாக என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்).

தகவல் பெறும் உரிமைச் சட்டம் - பிரிவு 19(3)-ன் கீழ் மேல்முறையீட்டு மனு

பிரிவு 19(3)-ன் கீழ் மேல்முறையீட்டு மனு 

Thursday 6 July 2023

புதிய சட்டக்கல்லுாரிகளின் வருகையால், வருங்காலத்தில் வழக்கறிஞர் தொழில் பாதிக்கப்பட வாய்ப்புண்டா?

 அதிக அளவிலான புதிய சட்டக்கல்லுாரிகளின் வருகையால், வருங்காலத்தில் வழக்கறிஞர் பாதிக்கப்பட வாய்ப்புண்டா?

.
ஒரு தொழில் மேம்பட, அந்தத் தொழிலில் இருப்பவர்கள் அந்தத் தொழிலில் புதிய வாய்ப்புகளைத் தேட முன்வர வேண்டும். இது அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும். 1960-களில் எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் பெரிய மருத்துவர்களாகத் தெரிந்தார்கள். 1990-களில் மருத்துவத் துறையில் பட்டமேற்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்கள் பெரிய மருத்துவர்களாகத் தெரிந்தார்கள். இன்று ஒவ்வொரு மருத்துவத் துறையினையும் பிரித்து அந்தந்த துறையில் D.M. அல்லது MCh. படித்தவர்கள் பெரிய மருத்துவர்களாகக் கருதப்படுகின்றார்கள். 1960-களில் எம்.பி.பி.எஸ் படித்தவரால் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்ட மருத்துவத்துறையில், இன்று ஏற்பட்ட முன்னேற்றங்களால், ஒவ்வொரு தனி மருத்துவத்துறைக்கும் ஒரு படிப்பு என்றும் அதற்கென சிறப்பு மருத்துவர்கள் என்ற நிலை உருவாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், அந்தத் துறையில் ஏற்படும் புதிய விடயங்களில் மற்றும் வாய்ப்புகளில் மருத்துவர்கள் தங்களை உட்புகுத்தி, புதியத்துறையில் (specialty) தங்களைச் சிறப்பு மருத்துவர்களாக்கி கொண்டுள்ளதால்தான். இதனால்தான், இன்று பல புதிய மருத்துவ கல்லுாரிகள் வந்தும், மருத்துவப்படிப்பினை அதிக அளவிலான இளம்தலைமுறையினர் எடுத்து படிக்க விருப்பப்படுகின்றார்கள்.
.
ஆனால், இன்று வரைச் சட்டத் தொழிலானது இவ்வாறு சிறப்பு துறைச்சார்ந்து பெருமளவில் வளரவில்லை. அவ்வாறு வளர்வதற்கான வகையில், பயிற்சிகளையும் நமது சட்டக்கல்வி அளிப்பதில்லை. இன்றும், சட்டக்கல்லுாரி மாணவர்கள் சட்டப் புத்தகத்தில் உள்ளவற்றை மட்டுமே படித்து வெளிவரும் நிலைதான் உள்ளது. இன்று மருத்துவப்படிப்பு முதன்மையாகத் திகழுவதற்கு காரணம், அவர்களின் இளநிலைப் படிப்பு முதல் சிறப்பு முதுநிலை படிப்பு வரை அனைத்து படிப்புகளும் மருத்துவ பயிற்சியையும் உள்ளடக்கியதாகும். இவ்வாறான நிலைச் சட்டப்படிப்பிலும் வரவேண்டும். முதுநிலைச் சட்டப்படிப்பில், அறிவுசார்ச் சொத்துரிமை சட்டம் (IPR) எனத் தனிப்பாடப்பிரிவு உள்ளது. இந்தப் பாடப்பிரிவில் முதுநிலைச் சட்டம் படித்து வருபவர்களுக்கு, ஒரு Trademark எப்படி அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற சிறு புரிதல்கூட இருப்பதில்லை. இதற்குக் காரணம், பெரும்பாலான சட்டப்பாடங்களானது அந்த சட்டம் சார்ந்த பயிற்சியோடு வழங்கப்படுவதில்லை. சட்டக் கல்லுாரிகளானது அதிக அளவிலான தனித்துவ சட்டப்பாடங்களில் செமினார்கள் நடத்த முன்வரவேண்டும். குறிப்பாக, பயிற்சியுடன் சேர்ந்த செமினார்கள் நடத்தப்பட வேண்டும். இன்று கிரிமினல் வழக்குகளில் முக்கியமாகப் பங்கு வகிக்கும் மருத்துவ துறை Forensic Medicine என்பதாகும். சட்டக்கல்லுாரிகளில் Forensic Medicine துறைச்சார்ந்த மருத்துவ கல்லுாரி பேராசிரியர்களை அழைத்துவந்து, அந்தத் துறைசார்ந்த புரிதலை சட்டக்கல்லுாரி மாணவர்களுக்கு போதிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு அரசு துறைச்சார்ந்த அலுவலர்களை கொண்டு செமினார்கள் நடத்தப்படவேண்டும். ஏனெனில், வழக்கறிஞர் ஒருவருக்கு, அனைத்து துறைகளிலுமான புரிதல் அவசியம்.
.
இன்று மேலைநாடுகளில் நல்ல சமுதாயக் கட்டமைப்பு இருப்பதற்கு காரணம் அதிக அளவிலான தீங்கியல் சட்டத்தின் உபயோகமே. ஆனால், நமது நாட்டில் தீங்கியல் சட்டத்தின் உபயோகம் மிகக் குறைவானதே. MCOP, Consumer Commission Cases – தவிர்த்து, தீங்கியில் சட்டத்தில் மிகக் குறைந்த வழக்குகளே நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன. இனி வருங்காலங்களில், சட்டம் கற்று வருபவர்கள் சிவில்,கிரிமினல் சட்டங்களுடன், ஏதாகிலும் தனிச் சட்டத்துறையில் தங்களின் புரிதலை வளர்த்து கொள்ள முன்வர வேண்டும். 1960-களில் எம்.பி.பி.எஸ் என்று ஆரம்பித்து இன்று D.M., Mch என்று மருத்துவத்துறையில் பெரிய அளவிலான தனித்துறை வளர்ச்சியானது எவ்வாறு இருக்கின்றதோ, அதுபோன்று சட்டத் துறையிலும் துறைச்சார்ந்த வளர்ச்சி ஏற்பாடாவிடில், வருங்காலத்தில் சட்டத் தொழில் அதிக அளவிலான சட்டக்கல்லுாரி மாணவர்களின் வருகையால் ஒரு தேக்கத்தைச் சந்திப்பதை தவிர்க்க முடியாது. மேலும், வழக்கறிஞர் தொழிலில் தேவைப்படும் மாற்றங்களைப் பற்றி சிந்திக்காமல், புதிய சட்டக்கல்லுாரிகளினால், அதிக அளவிலான வழக்கறிஞர்களின் வருகையால் வழக்கறிஞர் தொழில் நசித்து போகும் என்று நினைப்பது, முற்றிலும் ஒரு தவறான கண்ணோட்டமாகவே அமையும்.

Wednesday 28 June 2023

அரசு அலுவலகத்தில் தன்-பதிவேடு பராமரிப்பு

 

ஒரு அலுவலகத்தில் முக்கியமான ஒரு ஆவணம் தன் பதிவேடு (Personal Register) ஆகும். இது ஒவ்வொரு அலுவலக உதவியாளராலும் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடாகும். ஒவ்வொரு உதவியாளரும், ஒரு மனு அவரிடம் வந்தவுடன் இந்த தன்-பதிவேட்டில் அதன் மனுவின் முழு விபரத்தினை அதற்கு கொடுக்கப்பட்ட கோப்பு எண்ணுடன் எழுத வேண்டும். பிறகு எந்த நாளில் அந்த மனுவானது நடவடிக்கைக்காக அலுவலக கண்காணிப்பாளர், அலுவலக அதிகாரி முன்னர் வைக்கப்பட்டது என்று விபரத்தினை எழுதவேண்டும். அந்த மனுவிற்கான அனைத்து நடவடிக்கையும் அந்த பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். பதிவேட்டில் ஒரு மனுவை எழுதியவுடன், அதற்கு ஒரு சீனியாரிட்டி அங்கு கிடைத்துவிடுவதால், ஒரு மனுவை விட்டு, மற்ற மனு மீது நடவடிக்கையை தொடரமுடியாது. தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர்கள், தங்கள் மனு சார்ந்த தகவல்களை கோரும்போது,

1) மனுவிற்கு கொடுக்கப்பட்ட கோப்பு எண்

2) எந்த தேதியில் மனுவானது தன்-பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டது.

3) மனு பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து தஅஉ சட்ட மனுவிற்கு பதில் அளிக்கும் தேதி வரையிலான தன் பதிவேட்டின் நகல்

4) கோப்பு குறிப்புகளின் நகல், ஆகியவைகளை

பொது தகவல் அலுவலரிடம் கோரினாலோ, அந்த மனுவின்மீது எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கையும் வெட்ட வெளிச்சமாகிவிடும். தன்-பதிவேடு பராமரிப்பது என்பது அலுவலக உதவியாளர்களுக்கு அதிக வேலைப்பழுவை ஏற்படுத்தும் விஷயம் என்பதால், பல உதவியாளர்கள் அதை ஒழுங்காக அல்லது முற்றிலுமாக பராமரிப்பதில்லை. அதை பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டியது துறைத்தலைவர் ஆவார். தன்-பதிவேட்டினை ஒரு அலுவலக உதவியாளர் பராமரிக்கவில்லை என்றால், அந்த உதவியாளர் மீது அலுவலக விதிகளின்படி துறைத்தலைவர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம்.