Pages

Thursday 6 July 2023

புதிய சட்டக்கல்லுாரிகளின் வருகையால், வருங்காலத்தில் வழக்கறிஞர் தொழில் பாதிக்கப்பட வாய்ப்புண்டா?

 அதிக அளவிலான புதிய சட்டக்கல்லுாரிகளின் வருகையால், வருங்காலத்தில் வழக்கறிஞர் பாதிக்கப்பட வாய்ப்புண்டா?

.
ஒரு தொழில் மேம்பட, அந்தத் தொழிலில் இருப்பவர்கள் அந்தத் தொழிலில் புதிய வாய்ப்புகளைத் தேட முன்வர வேண்டும். இது அனைத்துத் தொழில்களுக்கும் பொருந்தும். 1960-களில் எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் பெரிய மருத்துவர்களாகத் தெரிந்தார்கள். 1990-களில் மருத்துவத் துறையில் பட்டமேற்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்கள் பெரிய மருத்துவர்களாகத் தெரிந்தார்கள். இன்று ஒவ்வொரு மருத்துவத் துறையினையும் பிரித்து அந்தந்த துறையில் D.M. அல்லது MCh. படித்தவர்கள் பெரிய மருத்துவர்களாகக் கருதப்படுகின்றார்கள். 1960-களில் எம்.பி.பி.எஸ் படித்தவரால் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்பட்ட மருத்துவத்துறையில், இன்று ஏற்பட்ட முன்னேற்றங்களால், ஒவ்வொரு தனி மருத்துவத்துறைக்கும் ஒரு படிப்பு என்றும் அதற்கென சிறப்பு மருத்துவர்கள் என்ற நிலை உருவாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம், அந்தத் துறையில் ஏற்படும் புதிய விடயங்களில் மற்றும் வாய்ப்புகளில் மருத்துவர்கள் தங்களை உட்புகுத்தி, புதியத்துறையில் (specialty) தங்களைச் சிறப்பு மருத்துவர்களாக்கி கொண்டுள்ளதால்தான். இதனால்தான், இன்று பல புதிய மருத்துவ கல்லுாரிகள் வந்தும், மருத்துவப்படிப்பினை அதிக அளவிலான இளம்தலைமுறையினர் எடுத்து படிக்க விருப்பப்படுகின்றார்கள்.
.
ஆனால், இன்று வரைச் சட்டத் தொழிலானது இவ்வாறு சிறப்பு துறைச்சார்ந்து பெருமளவில் வளரவில்லை. அவ்வாறு வளர்வதற்கான வகையில், பயிற்சிகளையும் நமது சட்டக்கல்வி அளிப்பதில்லை. இன்றும், சட்டக்கல்லுாரி மாணவர்கள் சட்டப் புத்தகத்தில் உள்ளவற்றை மட்டுமே படித்து வெளிவரும் நிலைதான் உள்ளது. இன்று மருத்துவப்படிப்பு முதன்மையாகத் திகழுவதற்கு காரணம், அவர்களின் இளநிலைப் படிப்பு முதல் சிறப்பு முதுநிலை படிப்பு வரை அனைத்து படிப்புகளும் மருத்துவ பயிற்சியையும் உள்ளடக்கியதாகும். இவ்வாறான நிலைச் சட்டப்படிப்பிலும் வரவேண்டும். முதுநிலைச் சட்டப்படிப்பில், அறிவுசார்ச் சொத்துரிமை சட்டம் (IPR) எனத் தனிப்பாடப்பிரிவு உள்ளது. இந்தப் பாடப்பிரிவில் முதுநிலைச் சட்டம் படித்து வருபவர்களுக்கு, ஒரு Trademark எப்படி அரசிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற சிறு புரிதல்கூட இருப்பதில்லை. இதற்குக் காரணம், பெரும்பாலான சட்டப்பாடங்களானது அந்த சட்டம் சார்ந்த பயிற்சியோடு வழங்கப்படுவதில்லை. சட்டக் கல்லுாரிகளானது அதிக அளவிலான தனித்துவ சட்டப்பாடங்களில் செமினார்கள் நடத்த முன்வரவேண்டும். குறிப்பாக, பயிற்சியுடன் சேர்ந்த செமினார்கள் நடத்தப்பட வேண்டும். இன்று கிரிமினல் வழக்குகளில் முக்கியமாகப் பங்கு வகிக்கும் மருத்துவ துறை Forensic Medicine என்பதாகும். சட்டக்கல்லுாரிகளில் Forensic Medicine துறைச்சார்ந்த மருத்துவ கல்லுாரி பேராசிரியர்களை அழைத்துவந்து, அந்தத் துறைசார்ந்த புரிதலை சட்டக்கல்லுாரி மாணவர்களுக்கு போதிக்க வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு அரசு துறைச்சார்ந்த அலுவலர்களை கொண்டு செமினார்கள் நடத்தப்படவேண்டும். ஏனெனில், வழக்கறிஞர் ஒருவருக்கு, அனைத்து துறைகளிலுமான புரிதல் அவசியம்.
.
இன்று மேலைநாடுகளில் நல்ல சமுதாயக் கட்டமைப்பு இருப்பதற்கு காரணம் அதிக அளவிலான தீங்கியல் சட்டத்தின் உபயோகமே. ஆனால், நமது நாட்டில் தீங்கியல் சட்டத்தின் உபயோகம் மிகக் குறைவானதே. MCOP, Consumer Commission Cases – தவிர்த்து, தீங்கியில் சட்டத்தில் மிகக் குறைந்த வழக்குகளே நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன. இனி வருங்காலங்களில், சட்டம் கற்று வருபவர்கள் சிவில்,கிரிமினல் சட்டங்களுடன், ஏதாகிலும் தனிச் சட்டத்துறையில் தங்களின் புரிதலை வளர்த்து கொள்ள முன்வர வேண்டும். 1960-களில் எம்.பி.பி.எஸ் என்று ஆரம்பித்து இன்று D.M., Mch என்று மருத்துவத்துறையில் பெரிய அளவிலான தனித்துறை வளர்ச்சியானது எவ்வாறு இருக்கின்றதோ, அதுபோன்று சட்டத் துறையிலும் துறைச்சார்ந்த வளர்ச்சி ஏற்பாடாவிடில், வருங்காலத்தில் சட்டத் தொழில் அதிக அளவிலான சட்டக்கல்லுாரி மாணவர்களின் வருகையால் ஒரு தேக்கத்தைச் சந்திப்பதை தவிர்க்க முடியாது. மேலும், வழக்கறிஞர் தொழிலில் தேவைப்படும் மாற்றங்களைப் பற்றி சிந்திக்காமல், புதிய சட்டக்கல்லுாரிகளினால், அதிக அளவிலான வழக்கறிஞர்களின் வருகையால் வழக்கறிஞர் தொழில் நசித்து போகும் என்று நினைப்பது, முற்றிலும் ஒரு தவறான கண்ணோட்டமாகவே அமையும்.

No comments:

Post a Comment