Pages

Thursday 20 July 2023

மருத்துவ சேவைக் குறைபாடு என்பது நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையங்களின் வரம்பிற்குள் வருவது சரியா?

மருத்துவ சேவைக் குறைபாடு என்பது நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையங்களின் வரம்பிற்குள் வருவது சரியா?

.
ஒவ்வொரு துறையில் பணிபுரிபவர்களிடம், அந்தத் துறைச்சார்ந்த பொறுப்புடைமை இருக்க வேண்டும். அவ்வாறான பொறுப்புடைமை ஏற்படுத்ததான் அரசாங்கம் பல சட்டங்களை இயற்றி வருகின்றது. உதாரணமாக அரசு அலுவலர்களிடையே பொறுப்புடைமையை ஏற்படுத்துவதற்காகத்தான் தகவல் பெறும் உரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. (இந்தச் சட்டமானது தகவல் பெறுவதற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட சட்டமாக பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்). ஒரு தொழிலில் ஈடுபடுவர்கள் பொறுப்புடைமையுடன் செயல்படவில்லை என்றால், உரிய அதிகார அமைப்புடன் முறையீட்டு அவர்களைப் பொறுப்புடைமையுடன் செயல்பட வைப்பது என்பது அவசியம் இல்லையெனில் அந்த தொழில் மாண்பமை குறைந்துவிடும். அதற்காக, ஒரு இலகுவான சட்டமும் அவசியம். அவ்வாறு எந்தத் தொழிலும் உள்ள சேவைக் குறைபாடுகளைக் களைய உருவாக்கப்பட்ட சட்டம்தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமாகும்.
.
வழக்கறிஞரால் பாதிப்பு அடைந்த ஒருவர், சுயவழக்காடியாகச் சட்டங்களையும் நீதிமன்ற நடைமுறைகளையும் தெரிந்து கொண்டு அவரது வழக்கைத் தொடரலாம். ஆனால், மருத்துவத் துறையில் அது சாத்தியமா? ஒருவருக்கு உடல்ரீதியான மருத்துவ பிரச்சனை என்றால், அவர் கட்டாயம் மருத்துவரை அணுகி மட்டுமே தீர்வு காண முடியும் என்பதால், மருத்துவர்களின் தொழிலில் அதிகப்பட்சப் பொறுப்புடைமை என்பது அவசியமாகின்றது. அந்தப் பொறுப்புடைமையை உறுதி செய்வதற்காக பொது மக்களின் கைவசம் உள்ள சட்டம்தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டமாகும். நமது நாட்டில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையோடு, அவர்கள் மீதான வழக்குகளை எடுத்துக் கொண்டால், அது மிக குறைவான எண்ணிக்கையிலானது. அதற்கு முக்கிய காரணம் இன்றும், மக்கள் மருத்துவரை தெய்வமாக நினைப்பதும், மருத்துவர் வேண்டுமென்றே தப்பு செய்திருக்க மாட்டார் என்ற மக்களின் அதீத நம்பிக்கையாகும். “மருத்துவர் வேண்டுமென்றே தப்பு செய்திருக்க மாட்டார்“ எனும் நம்பிக்கைச் சில நேரங்களில் சில மருத்துவர்களால் தகர்க்கப்படும்போது, குறிப்பாக Gross Negligence என்ற வகையான மருத்துவ சேவை குறைபாடுகளில், (நோயாளி இறக்கும்போது) வேறு வழியின்றி பொது மக்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்ததை நாட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள்.
.
Somraj Sen & Anr. Vs. Kothari Medical Centre & 7 Ors (2023) என்ற வழக்கில் மருத்துவர் ஒருவருக்கு ‘D & C’ laparoscopic procedure செய்யும்போது மாரடைப்பு வந்து இறந்துவிடுகின்றார். இதில் மருத்துவர்கள் அளித்த சேவையில் எந்தவிதக் குறைபாடு இல்லை எனவும், ஆனால் மருத்துவமனை சேவைக் குறைபாடுடன் செயல்பட்டதாக 1.25 கோடி இழப்பீடு வழங்க மத்திய நுகர்வோர் ஆணையம் ஆணையிட்டுள்ளது. இங்கு ஒரு விடயத்தைக் கவனிக்கவும், இறந்தவர் மருத்துவர் என்பதனால், அவரது குடும்பத்தார், மருத்துவர் மீதோ அல்லது மருத்துவமனையின்மீதோ வழக்காடமல் இருந்தார்களா? மருத்துவ சேவைக் குறைபாடு இருந்ததாகப் புகார் செய்து, மருத்துவரின் குடும்பமே நிவாணம் பெற முடிந்த நிலையில், ஒரு சாமானியன் மருத்துவ சேவைக் குறைபாட்டினை எதிர்கொள்ளும்போது, நுகர்வோர்க் குறைதீர் ஆணையங்களை அணுகும் வகையில் மருத்துவ சேவைக் குறைபாட்டினை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் வரம்பிற்குள் வைத்திருப்பது என்பது சரிதானே?
.
மருத்துவரோ அல்லது அவரது குடும்பத்தாரே மருத்துவ சேவைக் குறைபாடு என்று புகாரினை சமர்ப்பித்தால், அவர்கள் வழக்கில் பெரும்பாலும் வெற்றியடைகின்றார்கள். அதற்குக் காரணம், மருத்துவத்துறையை பற்றிய புரிதல் அவர்களுக்கு உள்ளது. மேலும், வழக்கிற்குத் தேவையான விபரங்களை மருத்துவத்துறையில் உள்ளவர்களே அவர்களுக்கு எடுத்துக்கொடுத்து உதவுவார்கள். ஆனால், மருத்துவ சேவைக் குறைபாட்டிற்காக நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையங்களை அணுகும் பொதுமக்கள் பலருக்கு மருத்துவத்துறையினை பற்றிய புரிதல் இல்லாமையால் பல நேரங்களில் வழக்கில் வெற்றிப் பெற முடிவதில்லை.
.
தேசிய நுகர்வோர் ஆணையத்தின் மருத்துவ சேவைக் குறைபாடு ஆணைகள் பெரும்பாலும் வடமாநிலத்தை சார்ந்ததாகும். அங்கு, பொது மக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும், மருத்துவ சேவைக் குறைபாடு வழக்குகளில் அதிக அளவில் புரிதல் உள்ளது அதற்கு இணையாக மருத்துவ சேவை குறைபாடுகளை தவிர்க்கும் வகையில் மருத்துவர்களுக்கும் அதிக அளவில் புரிதல் உள்ளது. மருத்துவ சேவைக் குறைபாடுகளை தவிர்க்கும் வகையில் பொறுப்புடமையுடன் செயல்பட மருத்துவர்கள் முன் வரவேண்டும் அதற்காக Medical Negligence Cases-களில் அதிக அளவிலான கலந்துரையாடல்களை நடத்த வேண்டும். அதில் மருத்துவர்கள் கலந்து கொண்டு, என்ன வகையான விடயங்கள் மருத்துவ சேவை குறைபாடுகளில் வருகின்றது என்பதை அறிந்து, அவற்றைத் தவிர்த்து பொறுப்புடமையுடன் செயல்பட முன் வரவேண்டும்.
.
இன்று பல மருத்துவமனைகளில், மாண்பமை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், அறுவைச் சிகிச்சைகளுக்கு முன்னர்க் குறைந்தபட்ட informed consent-கூட பெறுவதில்லை. அதுவே, மருத்துவர்களுக்கு எதிராகச் சேவை குறைபாடாகவும் மற்றும் Unfair trade practice-ஆக அமைகின்றது.
.
ஆகவே, நுகர்வோர்ப் பாதுகாப்பு சட்டத்தின் வரம்பிற்குள் மருத்துவ சேவைக் குறைபாடு இருக்கும் வரை, மருத்துவ சேவைக் குறைபாட்டினை தவிர்க்கும் விதமாக அனைத்து நடவடிக்கைகளையும் மருத்துவர்கள் எடுத்து, பொறுப்புடைமையுடன் செயல்படுவது அவசியமாகும்.

No comments:

Post a Comment