Pages

Sunday, 20 October 2019

அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை ஏன் தாமதம் ஆகின்றது?


Shiva Ramakrishnan என்பவரின் முகநுால் பதிவு. அவருக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். 

அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு சென்றால் சில நேரங்களில் தாமதம் ஆவது ஏன் என்ற கேள்விக்கு விடையறிய அங்கு நடைபெறும் நடைமுறைகளை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம்.
.
அறுவை சிகிச்சைக்காக ஒரு நோயாளி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணரை (பொது அறுவை சிகிச்சை நிபுணர், எழும்பு முறிவு அறுவைச சிகிச்சை நிபுணர் மற்றும் இதர அறுவை சிகிச்சை நிபுணர்) பார்க்கும்போது, அவர் அந்த நோயாளியை பரிசோதித்து அவருக்கு அறுவை சிகிச்சை தேவையா என்பதை முதலில் தீர்மானிப்பார். நோயாளியிடம் எந்தவகையிலான அறுவை சிகிச்சை செய்யப்படும் என்பதை எடுத்து கூறுவார். பின்னர் அறுவை சிகிச்சை தேவைப்படும் அனைத்து உடல் நல பரிசோதனைகளும் செய்வார். உதாரணமாக நோயாளியின் இரத்த கொதிப்பு / இரத்த அழுத்தத்தை பரிசோதிப்பார், நோயாளி நீரிழிவு நோயால் மற்ற இதர நோயால் பாதிக்கப்பட்டுள்ளரா என்பதை கேட்டறிவார். பின்னர் அவருக்கு நீரழிவு நோய், நெஞ்சக மற்றும் இதர நோய்கள் இல்லை என்பதை உறுதி செய்ய இரத்த, சிறுநீர், எக்ரே பரிசோதனைகளுக்கு அனுப்புவார்.
.
நோயாளியின் அனைத்து லேப் பரிசோதனைகளையும் அறுவை சிகிச்சை நிபுணர் சரிபார்த்து, அவருக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாத பட்சத்தில், அறுவை சிகிச்சைக்கு மயக்கம் கொடுக்கும் வகையில், நடைபெற இருக்கும் அறுவை சிகிச்சை முறையை பற்றி விரிவாக எழுதி, நோயாளியின் அனைத்து ரிப்போர்ட்களையும் வைத்து அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுப்பதற்கு ஏற்ற வகையில் அவரது உடல் நலம் உள்ளதா என்பதை அறிய மயக்கவியல் மருத்துவரிடம் அனுப்புவார்.
மயக்கவியல் மருத்துவர் நோயாளியின் அறுவை சிகிச்சை தன்மைக்கு ஏற்ப மயக்கவியல் மருந்து செலுத்துவதற்கான உடல்நிலையில் நோயாளி உள்ளாரா என்பதை பரிசோதித்து, அவர் தகுதியானவர்தான் என்றால் நோயாளியனாவர் அறுவை சிகிச்சைக்கு தயார் என்ற அறிக்கையை கொடுப்பார். அதன் பின்னர் அந்த நோயாளிக்கு குறிப்பிட்ட நாளில் அறுவை சிகிச்சை நிபுணர் அறுவை சிகிச்சை மேற்கொள்வார். மேலே சொல்லப்பட்டதுதான் உடலில் எந்தவித பிரச்சனையும் இல்லாத நோயாளிக்கு, அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னர் அரசு மருத்துவமனையில் நடைபெறும் நடைமுறையாகும். நல்ல உடல்நிலையில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சை நடைபெறுவது தாமதம் ஆவது கிடையாது.
.
சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்ய தாமாதம் ஆவதற்கான காரணத்தை பார்ப்போம். அறுவை சிகிச்சை நிபுணர் முதலில் நோயாளியை பரிசோதித்தபோது அவருக்கு அதிக இரத்த அழுத்தம் இருந்தாலோ, அல்லது நீரழிவு மற்றும் இதர நோய்கள் இருந்தாலோ அந்த நோயாளியை அந்த பிரச்சனைகளை கட்டுபடுத்தும் வகையில் அதற்கான சிறப்பு மருத்துவர் ஒருவரிடம் அனுப்பி வைப்பார். அதன்படி இரத்த அழுத்தம் உள்ளவரை, பொது மருத்துவரானவர் அதற்கான மருந்துகளை சாப்பிட்டு, ஒரு குறிப்பிட்ட கால அளவிறகு திரும்பவும் அவரை பார்க்க வரச்சொல்லுவார். அந்த கால அளவிற்குள் இரத்த அழுத்தம் குறைந்து இருந்தால், அவர் அதை குறிப்பிட்டு அறுவை சிகிச்சை நிபுணரிடம் அந்த நோயாளியை திரும்பவும் அனுப்பி வைப்பார். நோயளிக்கு நீரிழிவு நோய் இருந்தாலும் இந்த முறைதான் கடைபிடிக்கப்படும். இவ்வாறு நோயாளியின் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும் வரை அவரை தகுந்த சிறப்பு மருத்துவரிடம் பரிந்துரை செய்வது என்பது அறுவை சிகிச்சை நிபுணரின் பணியாகும். இதுபோன்ற தாமதங்கள் தவிர்க்க முடியாதை.
.
நோயாளிக்கு எந்தவித உடல்நல பிரச்சனையும் இல்லை என்ற நிலையில்தான், அதாவது இனிஷயில் ஸ்கிரினிங் என்பார்கள் அவை அனைத்தையும் செய்து முடித்துதான் அறுவை சிகிச்சை நிபுணர் மயக்கவியல் மருத்துவரின் சம்மதத்திற்கு அனுப்ப வேண்டும். இதுதான் அனைத்து மருத்துவ கல்லுாரிகளிலும் பின்பற்றப்படும் நடைமுறையாகும்.
.
நோயாளியின் உடல் நலத்திற்கேற்ப அனைத்து சிறப்பு மருத்துவர்களும் பார்த்த பிறகு, மயக்கவியல் மருத்துவரிடம வரும் நோயாளியை, மயக்கவியல் மருத்துவரானவர் அறுவை சிகிச்சையின்போது அவருக்கு கொடுக்க இருக்கும் மயக்க மருந்து முறையயை தாங்கும் அளவில் நோயாளிக்கு ஏதாகிலும் குறை இருந்தால், அவரை மேலும் சில சிறப்பு மருத்துவர்களிடம் அவர்களது ஆலோசனைக்காக அனுப்புவார். உதாரணமாக மயக்கவியல் மருத்துவரானவர் நோயாளியின் இதயத்தில் சில பிரச்சனைகள் இருப்பதை கண்டறிந்தால், நோயாளியை இதய நோய் சிறப்பு சிகிச்சை நிபுணரிடம் அனுப்பி அவரது கருத்தை கேட்பார். எக்ஸ்ரேயில் நுரையீரலில் பாதிப்பு இருந்தால் காசா நோய் நிபுணரிடம் நோயாளியை அனுப்பி அவரின் கருத்து கேட்பார். அனைவரிடம் கருத்து கேட்ட பின், அந்த நோயாளியானவர் மயக்கவியல் மருத்துவம் கொடுக்கும் அளவிற்கு தகுதியானவரா என்று முடிவெடுப்பார்.
.
மருத்துவ கல்லுாரிகளில் அனைத்து சிறப்பு துறைகளும் இயங்கி வருகின்றது. குறிப்பாக இருதயம், சிறுநீரகம், நெஞ்சக ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு மருத்துவர்களின் கீழ் சிறப்பு துறைகள் இயங்கி வருகின்றது. ஆனால், இவ்வாறான துறைகள் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தாலுகா மருத்துவமனைகளிலோ இருப்பதில்லை. தமிழக அரசானது அடுக்கு முறை மருத்துவமனைகளை கொண்டு பொது மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவையை அளித்து வருகின்றது. எல்லா வசதிகளையும் கொண்டது சென்னையில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, அதற்கு அடுத்தாற்போல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், பின்னர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தாலுகாக மருத்துவமனை கடைசியாக குறைந்த வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்ற முறை பின் பற்றப்படுகின்றது. ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து அறுவை சிகிச்சையும் செய்ய முடியாது. அங்கு வரும் நோயாளியானவரானவர் மாவட்ட அரசு மருத்துவ மனைக்குதான் பரிந்துரை செய்யப்படுவார். இதய சம்பந்தமாக அறுவை சிகிச்சையானது மாவட்ட அரசு மருத்துவமனையில் செய்யமுடியாது அதற்காக நோயாளினவர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கோ அல்லது பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுவார்.
.
சில நேரங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளில் இதயத்தில் பிரச்சனை உள்ளவர்கள், குறிப்பாக அறுவை சிகிச்சை நேரத்தில் அந்த நோயின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு உள்ள நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவ கல்லுாரிக்கு மாறுதல் செய்யப்படுவார்கள் ஏனெனில் அறுவை சிகிச்சையின்போதோ அல்லது அறுவை சிகிச்சைக்கு பின்னரோ நோயாளிக்கு இதய சம்பந்தமாக பிரச்சனை ஏற்பட்டால், அதை சரிசெய்ய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இதய நோய் சிகிச்சை சிபுணர் அனைத்து நேரங்களிலும் இருப்பதில்லை. ஆகவே, நோயாளியானவர் உயர் சிகிச்சைக்கு அருகில் உள்ள மருத்து கல்லுாரிக்கு மாறுதல் செய்யப்படுவது என்பது அவரின் நலன் குறித்துதானே தவிர, தேவையற்ற வகையில் மாறுதல் செய்யப்படுவதில்லை. ஆகவே, நோயாளியானவர் அருகில் உள்ள மருத்துவ கல்லுாரிக்கு செல்ல மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்படும்போது, அது நோயாளின் நலனுக்கானது என்று நோயாளியின் உறவினர்கள் அதை ஏற்று கொள்ள வேண்டும். ஒரு நாளில் பலருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் மாவட்ட அரசு மருத்துவமகைளில், மருத்துவர்கள் ஏன் ஒரு குறிப்பிட்ட சிலரை மட்டுமே மருத்துவ கல்லுாரிக்கு செல்ல பரிந்துரை செய்கின்றார்கள் என்பதை உறவினர்கள் உணரவேண்டும்.
.
இப்போது அறுவை சிகிச்சைக்கான தாமத்திற்கு வருவோம். மேற்கூறிய முறையில், அதாவது நோயாளி அறுவை சிகிச்சை நிபுணரை சந்திக்கின்றார், அவர் அவரை பரிசோதிக்கின்றார், அவருக்கு பிரச்சனை இருந்தால், சிறப்பு மருத்துவர்களிடம் அனுப்பி வைக்கின்றார், சிறப்பு மருத்துவர் அவருக்கு உள்ள பிரச்சனையை சரி செய்ததும், திரும்பவும் அறுவை சிகிச்சை நிபுணரை சந்திக்கின்றார், அவர் அந்த நோயாளியை திரும்ப ஒரு முறை பரிசோதித்து அதன் பின்னர் மயக்கவியல் மருத்துவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கின்றார். இந்த அடுத்தடுத்த நடைமுறையில் எங்காவது தவறு நடக்குமானால் அந்த நோயாளி வீணாக அலைக்கழிப்பவடுவார்.
உதாரணமாக நோயளியின் உடல் நிலையை அறுவை சிகிச்சை நிபுணரால் முற்றிலுமாக / முறையாக பரிசோதிக்கப்படாமல் அவரை மயக்கவியல் மருத்துவரிடம் அனுப்பி வைப்பது வீண் தாமத்தை உருவாக்கும். பொதுவாக அறுவை சிகிச்சை நிபுணர்களானவர்கள் நோயாளியிடம், “ மயக்கவியல் மருத்துவர் ஓகே சொல்லிவிட்டால் அறுவை சிகிச்சை செய்துவிடலாம்“ என்று சொல்லிவிடுவார்கள். இப்போது நோயாளியை பரிசோதித்த மயக்கவியல் நிபுணரானவர் அவருக்கு இரத்த அழுத்தம் இருப்பதை கண்டறிந்தால், அவரை பொது மருத்துவரிடம் அனுப்பி வைப்பார். ஏற்கனவே நோயாளியின் மனதில் மயக்கவியல் மருத்துவர் அறுவை சிகிச்சைக்கு சரி என்று சொன்னால், உடனடியாக அறுவை சிகிச்சை நடந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருப்பவருக்கு, இப்போது புதிதாக அவரை பொது மருத்துவரிடம் மயக்கவியல் மருத்துவர் இரத்த அழுத்தத்திற்காக அனுப்பப்படும்போது, அவர் கோபம் எல்லாம் மயக்கவியல் மருத்துவர் மீது திரும்புகின்றது. ஏனெனில் மயக்கவியல் மருத்துவர் வீணாக அவரை பொது மருத்துவரிடம் அனுப்பி அலைக்கழிப்பதாக அவர் நினைத்து கொள்கின்றார்.
.
மேற்படி கூறிய அடுத்தடுத்த நடைமுறையில், அறுவை சிகிச்சை நிபுணரின் பணிதான் நோயாளின் உடல்நலத்தை பற்றிய அனைத்து முன் பரிசோதனைகளையும் செய்வதாகும். மேற்கூறிய உதாரணத்தில் அறுவை சிகிச்சை நிபுணர் நோயாளிக்கு இரத்த அழுத்தம் இருப்பதை கண்டு பிடித்திருந்தால்,அவரை பொது மருத்துவரிடம் நேரடியாக அனுப்பி வைத்திருக்க வேண்டுமே தவிர மயக்கவியல் மருத்துவரிடம் வந்து அதன்பின் பொது மருத்துவரிடம் அனுப்பத் தேவையில்லை. நோயாளியை பரிசோதிக்கும்போது, அவருக்கு ஆரம்பித்திலேயே உடல்நிலையில் பிரச்சனை இருப்பதை எடுத்து கூறினால் அவர் அமைதியாக இருப்பார். ஆனால் நோயாளியிடம் “மயக்கவியல் மருத்துவர் ஓகே சொன்னால், உங்களுக்கு உடனே ஆபரேஸன் செய்துவிடுவோம்“ என்று சொல்லி, அதன்பிறகு மயக்கவியல் மருத்துவர் அவரை சிறப்பு மருத்துவரிடம் அனுப்பி, அதன் பின்னர் சில வாரங்கள் கழித்து அவர் மயக்கவியல் மருத்துவரிடம் வரும்போது, நோயாளியானவர் மனதளவில் மருத்துவமனையின் நடைமுறைகளை பற்றி கோபப்பட ஆரம்பிக்கின்றார்.
.
பொதுவாக அறுவை சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அவர்களது அதிருப்தியை முதலில் காட்டுவது என்பது முன் பரிசோதனை செய்யும் மயக்கவியல் மருத்துவரிடம்தான் “என்ன சார், ஒரு மாசமாக அலைந்து கொண்டிருக்கின்றோம். இப்போ எனக்கு இரத்த அழுத்தம் இருக்கின்றது என்று நீங்கள் சொல்லுகின்றீர்கள். ஆனால் அறுவை சிகிச்சை நிபுணரும் இரத்த கொதிப்பிற்கு மெஷின் கட்டி பார்த்தார், ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை“ என்று கூறி பிரச்சனை பண்ணுவார்கள். ஆகவே, மேற்கூறிய அடுத்தடுத்த நடைமுறைகள் ஒழுங்காக அனைத்து மருத்துவர்களாலும் முறையாக பின்பற்றால் மட்டுமே, அறுவை சிகிச்சைகள் தாமதம் இல்லாமல் நடைபெறும்.

No comments:

Post a Comment