Pages

Wednesday, 26 November 2014

நம்பிக்கையின் அடையாளம் தலைமையின் ஆணையை மதித்து நடப்பதுதான்

தலைமையின் ஆணையை மதித்து நடப்பதுதான் நம்பிக்கையின் அடையாளம்.

சிங்கபூர் துறைமுகம்.  எனது கப்பலில் புதிதாக இரண்டாம் நிலை நேவிகேஷன் ஆபிஸர் (2nd Officer - 2/O)  ஒருவர் பணியில் சேர்ந்தார். அன்று இரவு எனது கப்பல் சிங்கப்பூர் துறைமுகத்திலிருந்து ஆஸ்திரேலியா நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.

2/O-வின் பணிநேரம் மதியம் 12 முதல் மாலை 4 மற்றும் அதிகாலை 12 மணி முதல் காலை 4 மணிவரை. இவ்வாறாக, ஒவ்வொரு அதிகாரியும் 8 மணிநேர இடைவெளிவிட்டு, நான்கு மணிநேரங்கள் கப்பலை கடலில் ஓட்டவேண்டும்.  கப்பல் சென்று கொண்டிருக்கும்போது, எதிரே அல்லது பக்கவாட்டில் கப்பல் வந்தால், அந்த கப்பலுக்கு கடல் விதிகளின்படி வழிவிட்டு செல்லும் வகையில் கப்பலை செலுத்த வேண்டும். இதுவே கப்பல் அதிகாரிகளின் முக்கிய பணி ஆகும்.

கப்பலுக்கு பிரேக் என்பது கிடையாது. சிங்கப்பூர் துறைமுகத்தை விட்டால் எனது கப்பல் ஆஸ்திரேலியா சென்றுதான் நிற்கும். இடைப்பட்ட நேரத்தில் கப்பலின் வேகத்தை மாற்ற மாட்டார்கள் (இதற்கு காரணம் கப்பல் நடுக்கடலில் ஹெவி ஆயிலில் மூலமாக செலுத்தப்படுவதால், நினைத்த நேரத்தில் கப்பலின் வேகத்தை குறைக்க முடியாது). நடுக்கடலில் எதிராக ஒரு கப்பல் வந்தால், வேகத்தை குறைக்காமல் விலகித்தான் செல்லமுடியுமே தவிர வேகத்தை குறைத்து எதிரில் மற்றும் பக்கவாட்டில் வரும் கப்பல்களுக்கு வழி கொடுக்க முடியாது. ஆகவே, நமது கப்பலில் இருந்து 3 நாட்டிகல் மைலுக்குள் எந்த ஒரு கப்பலும் வராமல் நமது கப்பலை செலுத்தவேண்டும். நமது கப்பலில் இருந்து 3 நாட்டிகள் மைலுக்குள் ஒரு கப்பல் வந்துவிட்டால், அந்த நிலையில் நமது கப்பலுக்கு பேராபத்து வந்துள்ளதாக அர்த்தம் கொள்ளப்படும்.

பொதுவாக, இரவு 9 மணி அளவில் கப்பல் கேப்டனானவர், இரவு வரும் அதிகாரிகளுக்கென்று சில ஆணைகளை ஒரு புத்தகத்தில் பிறப்பிப்பார். அவ்வாறு, கப்பல் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்ட மறுநாள் இரவு, கீழ்கண்ட ஆணையை  எழுதினார். ‘ மூன்று நாட்டிக்கல் மைலுக்குள் எந்தவித கப்பலையும் அணுகவிடாதே. அதையும் மீறி வந்தால், உடனே என்னை எழுப்பு’.

புதிதாக சேர்ந்து 2/O மிகவும் அனுபவசாலி.  இரவு 2 மணி அளவில் மற்றொரு கப்பல்  எங்களது கப்பலில் இருந்து 2 மைலுக்குள் பக்கவாட்டில் பயணம் செய்தது.  அது பக்கவாட்டில் பயணம் செய்ததினால் எங்கள் கப்பலுக்கு ஆபத்தில்லை என்று அவரது அனுபவத்தின் அடிப்படையில் கருதி கேப்டனை அவர் எழுப்பவில்லை. ஆனால், கேப்டன் இரவு நேரத்தில் அந்த கப்பல் எங்களது கப்பல் அருகில் வருவதை பார்த்திருக்கிறார்.

கப்பல் ஆஸ்திரேலியா அடைவதற்கு முன்னர் என்னிடம் கீழ்கண்ட செய்தியை கம்பெனிக்கு அனுப்ப சொன்னார். ‘ 2/O is untrustworthy. Require immediate replacement’.   கம்பெனியும் ஆஸ்திரேலியா கப்பல் சென்றடைந்தும், புதிய 2/O அனுப்பி வைத்துவிட்டது.

பழைய 2/O கேப்டனிடம் சென்று ‘நான் என்ன தவறு செய்தேன்? என்னை ஏன் பணியில் இருந்து நீக்குகிறீர்கள் என்று கேட்டதற்கு கேப்டன் ‘எனது ஆணையை மீறி மற்றொரு கப்பலை 2 நாட்டிக்கல் மைல் தூரத்தில் நமது கப்பல் அருகே வர நீ அனுமதித்தாய்’.

அதற்கு அந்த 2/O: ‘அந்த கப்பல் பக்கவாட்டில்தான் வந்து கொண்டிருந்து. அதனால் நமது கப்பலுக்கு எந்தவித பாதிப்பில்லை அதனால்தான் இரவு நேரத்தில் உங்களை தொந்திரவு செய்யக்கூடாது என்று உங்களை எழுப்பவில்லை.'

கேப்டன்: ‘உனது வேலை என் ஆணையை மதிப்பதுதான். நீ என்னை எழுப்பி விஷயத்தை கூறியிருந்தால்,  நீ எந்தவித  பிரச்சனையையும் எந்த சூழ்நிலையிலும் எனது பார்வைக்கு உடனடியாக கொண்டு வருவாய் என்று நிம்மதியாக என்னால் இருக்கமுடியும். ஆனால், என் ஆணையை மதிக்காமல், சொந்தமாக முடிவெடுக்கும் உன்னால், நாளை கப்பலில் இருக்கும் அனைத்து உயிர்களும் பலியாக நேரிடலாம்.  நீ அனுபவசாலியாக இருக்கலாம். ஆனால் நீ நம்பதகாதவன். உனது பணி இந்த கப்பலுக்கு தேவையில்லை’ என்று கூறினார்.

No comments:

Post a Comment