தகவல் அறியும் உரிமை சட்டம் வந்து 14 ஆண்டுகள் கடந்துவிட்டன.. இந்த சட்டத்தின் அடிப்படையான “தகவல்“ என்பதற்கான பொருள் விளக்கம் பிரிவு 2(f)-ல் தெளிவாக கொடுக்கப்பட்டிருந்தும், அதை படித்து புரியாத, அல்லது புரியாதது போல நடிக்கும் சில பொது தகவல் அலுவலர்களுக்கு “தகவல் என்றால் என்ன?” என்று பாடம் எடுக்கும் நிலைதான் இன்றும் தொடர்கின்றது.
.
தகவல் மறுப்பதற்காக பொது தகவல் அலுவலர்களுக்கு, இந்த சட்டத்தில் அதிக பட்சம் தெரிந்த பிரிவுகள் 2(f) மற்றும் 8(1)(j), அதாவது கோருபவை தகவல் எனும் பதத்தில் வராது அல்லது தனிப்பட்ட நபர் தகவல் என்பதாகும். இவர்கள் ஒவ்வொரு முறையும் இவ்வாறான முறையற்ற வகையில் தகவலை மறுக்கும்போது, தபால் செலவினங்களாக மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்கின்றார்கள் என்பதை அவர்கள் சிறிதளவுகூட உணருவதில்லை. ஆவணங்களை கோரும்போது, அதற்கான பதிலை 30 நாட்கள் கழித்து வழங்குவதால், அந்த ஆவணங்களை இலவசமாக வழங்க நேரிடுகின்றபோது, அரசிற்கு பக்கத்திற்கு ரூ.2 வீதம் வருவாய் இழப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு வருடத்தில் பல இலட்சம் மக்கள் வரிப்பணம் பொது தகவல் அலுவலர்களால் வீணாகின்றது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் செலவழிக்கப்படும் பணம் (தபால் செலவினங்கள் மற்றும் ஆவணங்களை நகல் எடுக்கும் செலவினங்கள்) இதை அரசாங்கம் முறையாக தணிக்கை செய்கின்றதா என்பதும் தெரியவில்லை. ஆனால், நமது பணம் இவ்வாறு வீணாவதை நாம் அனுமதிக்கலாமா? இனிவரும் காலங்களில், யாரகிலும் பொது தகவல் அலுவலரானவர் கோரிய தகவல் பிரிவு 2(f)-ல் வராது என்றோ, தேவையற்ற வகையில் தனிநபர் தகவல் என்று கூறி தகவலை மறுத்தாலோ, ஆவணங்களை 30 நாட்களுக்கு வழங்க மறுத்தாலோ, பொது தகவல் அலுவலரிடம் இருந்து பதில் பெறப்பட்டதும், தகவலை கோரி மேல் முறையீடு செய்வது ஒரு பக்கம் இருந்தாலும், உடனே தகவல் ஆணையத்திற்கு பிரிவு 18(1)(b)(e)-ன் படி புகார் செய்யுங்கள் அதில் பொது தகவல் அலுவலர் மீது பிரிவு 20(1) மற்றும் 20(2)-ன் படி தண்டனை வழங்க கோரிக்கை வையுங்கள். இவ்வாறான தொடர் புகார்கள் மட்டுமே, பொது தகவல் அலுவலர்களை இந்த சட்டத்தை முறையாக பொது மக்களின் நலனுக்காக அமல்படுத்த வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment