Pages

Friday, 27 July 2018

நோயாளியை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மாறுதல் செய்தல் பற்றி..


இன்று தமிழக மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் தாலுகா அரசு மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகளின் நலன் கருதி, நோயாளிகளை அருகில் அனைத்து வசதி உள்ள அரசு மருத்துவ கல்லுாரிக்கு மாறுதல் (referral)  செய்தால், அரசு மருத்துவர்கள் வேண்டுமென்றே நோயாளியை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்புகின்றார்கள் என்ற குற்றச்சாட்டானது அரசு மருத்துவர்கள் மீது வைக்கப்படுகின்றது.
.
நோயாளியை பொறுத்த வரை அவருக்கு அவரது வீட்டருகில் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதேயாகும். ஆனால், ஒரு அரசு மருத்துவரை பொறுத்த வரையில் அந்த நோயாளிக்கு சிகிச்சையின்போது, எந்தவித குறையும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டுதான் அந்த நோயாளிக்கு உயர்தரமான சிகிச்சை கிடைக்கும் வகையில் அதிக மருத்துவ வசதியுள்ள அரசு மருத்துவக்கல்லுாரிக்கு மாறுதல் செய்கின்றார்கள்.
.
நோயாளிகளை மாறுதல் செய்யும் நிலை ஏற்பட்டால் 108 ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவ கல்லுாரிக்கு அனுப்பி வைக்கின்றார்கள். ஆக, நோயாளிகளுக்கு மருத்துவ கல்லுாரிக்கு செல்லும் வாகன செலவும் இல்லை.
.
நோயாளியை எதற்காக மருத்துவ கல்லுாரிக்கு மாறுதல் செய்கின்றார்கள் என்பதை சற்று விரிவாக பார்ப்போம்.
.
1)   மருத்துவ கல்லுாரிகளில் அனைத்து துறைகளும் இயங்குகின்றன. உதாரணமாக இருதய சம்பந்தமான துறை (இதய மருத்துவம் மற்றும் இதய அறுவை சிகிச்சை) 24 மணி நேரமும் இயங்கின்றது. ஆகவே, 24 மணி நேரமும் இதய மருத்துவத்தில் முதுநிலை சிறப்பு மருத்துவர்கள் MD DM (cardiology) & MCh.(Thoracic Surgery) மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பணியில் இருப்பார்கள். மாரடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு அவர்கள் கண்காணிப்பில் தனித்துறை (Cardio Care Unit) இயங்குகின்றது. இவ்வாறு MD DM (cardiology) படித்த மருத்துவர்கள் அனைத்து மாவட்ட அளவிலான அரசு தலைமை மருத்துவமனைகளில் பணியில் இருப்பதில்லை. உதாரணத்திற்கு ஒரு நோயாளியின் நிலையை கருத்தில் கொள்வோம். அவருக்கு இருதய சம்பந்தமான நோய் இருப்பதாக கொள்வோம். அவர் மாவட்ட அளவிலான மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்கு வருகின்றார். அவரை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பவதே அரசு மருத்துவரின் சரியான கடமையாகும். மாறாக, அவருக்கு மாவட்ட அளவிலான மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடக்கும்போது, அவருக்கு இதய பிரச்சனைகள் வந்தால், ஒரு MD.DM (Cardiology) –ன் மருத்துவ வசதி கிடைக்க வாய்ப்பில்லை. மேலும் மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் இருதயத்திற்கான தனி துறை (Cardio Care Unit) இருப்பதில்லை என்பதால், மருத்துவ கல்லுாரியில் கிடைக்கும் அனைத்து மருத்துவ வசதிகளும் மாவட்ட மருத்துவமனையில் கிடைக்க வாய்ப்பில்லை.
.
2)   அறுவை சிகிச்சையின் போது நோயளிக்கு இருதய மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் இருந்து நுரையீரலில் சளி கோர்த்து (pulmonary edema) மூச்சு திணறல் ஏற்பட்டால் அவரை உடனடியாக செயற்கை சுவாச பெட்டியில் (Ventilator) போட்டு முற்றிலுமாக மருத்துவ உதவி கிடைக்க செய்ய வேண்டும். ஒவ்வொரு மருத்துவ கல்லுாரிகளிலும் 10 மேற்பட்ட செயற்கை சுவாவசப்பெட்டிகள் வசதி உள்ளது. அதை Intensive Respiratory Care Unit  (IRCU) என்று அழைப்பார்கள். அங்கு மயக்கவியல் துறையில் இருந்து ஒரு மருத்துவர் 24 மணி நேரமும் பணியில் இருப்பார். அனைத்து நோயாளிகளும் அவரின் மேற்பார்வையில் சிகிச்சை பெறுவார்கள். இவ்வாறு IRCU-ல் இருக்கும் ஒரு நோயாளிக்கு மாரடைப்போ, சிறுநீரக பிரச்சனைகளோ மற்றும் சுவாச பிரச்சனைகளோ ஏற்பட்டால், உடனடியாக MD DM (Cardiology), MD (Nephrology), MD (Pulmonology) போன்ற ஒவ்வொரு துறைச்சார்நத சிறப்பு முதுநிலை மருத்துவர்கள் வந்து பார்ப்பார்கள். ஆனால், மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் 1 அல்லது 2 மட்டுமே இருக்கும். அதில் பெரும்பாலான நேரங்களில் பாம்புக்கடி மற்றும் தற்கொலை முயற்சி செய்த நோயாளிகளுக்கு வைத்தியம் வழங்கபட்டு கொண்டிருக்கும்.  இதனால், வென்டிலேட்டர் காலியாக இருப்பது மிக அரிது.  இப்போது, இருதய பிரச்சனை அல்லது சுவாச பிரச்சனை உள்ள நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின் போது பிரச்சனை ஏற்பட்டு அவர்களுக்க வென்டிலேட்டர் உதவி தேவைப்பட்டால், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள வென்டிலேட்டர்களில் மற்ற நோயாளிகள் இருக்கும் பட்சத்தில், உடனடி மருத்துவ உதவி தேவைபடும், அறுவை சிகிச்சை நடைபெற்ற நோயாளியை வென்டிலேட்டர் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவ கல்லுாரிக்கு மாறுதல் செய்யும் நிலை ஏற்படும். இவ்வாறு மாறுதல் செய்யப்படும் நேரத்தில் அவருக்கு மேலும் உடல்நல குறை ஏற்படலாம். ஆகவே, ஒரு நோயாளிக்கு இருதயத்தில் மற்றும் சுவாச பிரச்சனைகள் இருக்கும் பட்சத்தில், அவருக்கு அறுவை சிகிச்சையின்போது, ஏதாகிலும் பிரச்சனை வரும் என்று முன்னரே எதிர்பார்க்கும் நிலையில், அவரை மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் வைத்து அறுவை சிகிச்சை செய்வதை விட மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மாறுதல் செய்து அங்கு அறுவை சிகிச்சை செய்ய வைப்பதுதான் ஒரு அரசு மருத்துவரின் சரியான கடமையாகும்.
.
3)   ஒரு நோயாளி அறுவை சிகிச்சைக்கு வரும்போது, அவரை மயக்கவியல் மருத்துவர் முன் பரிசோதனை (Anaesthesia Pre-assessment) செய்து அவர் பொது மயக்கவியல் மருத்துவம் (General Anaesthesia) கொடுக்கும் வகையில் தகுதியானவரா என்று தீர்மானிப்பார். உதாரணமாக ஒரு கால் முறிவு அறுவை சிகிச்சைக்கு பொதுவாக முதுகு தண்டில் மயக்க மருந்து (Spinal Anaesthesia) செலுத்தி இடுப்பிற்கு கீழ் மரத்துபோகும் வகையில் மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்வார்கள். ஆனால், மயக்கவியல் மருத்துவரானவர்,  நோயாளியானவர் பொது மயக்கவில் மருத்துவத்திற்கு (General Anaesthesia) தயாரா என்றுதான் அனைத்து நேரத்திலும் தீர்மானிப்பார். முதுகு தண்டில் மயக்க மருந்து செலுத்தி அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருக்கும்போது, அறுவை சிகிச்சை அரங்கில் அவருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக அவரை பொது மயக்கவியல் மருத்துவத்திற்கு மாற்றி  அவரது சுவாசக்குழாயில் ட்யுப் போட்டு பாயில்ஸ் வழியாக சுவாசம் அளிப்பது அவசியம் என்பதால், மயக்கவியல் மருத்துவர் ஒவ்வொரு நோயாளியும் பொது மயக்கவியல் முறைக்கு தயாரா என்று உறுதி செய்து கொண்டுதான் மற்ற மயக்கவியல் முறையை பின்பற்றுவார்.  சிலருக்கு பொது மயக்கவியல் முறையில் சுவாசக்குழாயில் ட்யுப் போடுவது கடினமாக அமையும். சிலருக்கு ஏதாகிலும் பிரச்சனைகளால், வாய் முழுமையாக திறக்க முடியாமல் இருக்கலாம். ட்யுப் சுவாசக் குழாயிற்குள் போடவேண்டும் என்றால் நாம் பொதுவாக செல்லும் தொண்டையில் உள்ள ”குட்டி நாக்கு” தெளிவாக தெரியும் வகையில் இருக்க வேண்டும். கழுத்து நீளமாக இல்லாமல் குட்டையாக உள்ளவர்களுக்கு ட்யுப் போடுவதில் சிரமம் ஏற்படும். இதை மயக்கவியல் மருத்துவர்களானவர்கள் மல்லம்பட்டி கிரேடு என்று தரம் பிரிப்பார்கள். மல்லம்பட்டி கிரேடு 4 என்றால் அவர்களுக்க ட்யுப் போடுவதில் சிரமம் இருக்கும் என்பதாகும். பிறகு இவர்களுக்கு எப்படித்தான் அறுவை சிகிச்சை செய்வார்கள்? இதற்கென Fiber Optical Instrument இருக்கின்றது அதன் உதவியுடன் ட்யுப்பை போடுவார்கள். இந்த வசதி அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ளது. ஆக, ஒரு நோயாளிக்கு ட்யுப் போடுவதில் சிரமம் இருக்கும் பட்சத்தில் அவரை மருத்துவ கல்லுாரிக்கு மாறுதல் செய்வதுதான் மருத்துவரின் சரியான கடமையாகும்.  ஒரு நோயாளிக்கு ஆரம்பித்திலேயே, பொது மயக்கவியல் மருத்துவம் (General Anaesthesia) என்று தீர்மானித்து ட்யுப் போட முயற்சி செய்து, போட முடியவில்லை என்றால் அறுவை சிகிச்சையை ரத்து பண்ணிவிடலாம். ஆனால், வேறு மயக்கவியல் முறையில் (spinal Anaeasthesia) அறுவை சிகிச்சை நடந்து வரும் நிலையில், அவருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு ட்யுப் போடும் நிலை எற்பட்டால், வெகு குறைவான நேரத்தில் ட்யுப் போட்டு செயற்கை சுவாசம் கொடுத்தால் மட்டுமே நோயாளியை காப்பாற்ற முடியும் நிலையில், ட்யுப்போடுவதற்கு கடினம் என்ற நிலையில் உள்ள நோயாளியை அறுவை சிகிச்சைக்கு எடுப்பதற்கு முன்னரே அவருக்கு அனைத்து நேரங்களிலும் இலகுவாக ட்யுப் போட வசதியுள்ள அரசு மருத்துவ கல்லுாரிக்கு மாறுதல் செய்வதுதான் மயக்கவியல் மருத்துவரின் சரியான கடமையாகும்.
.
4)   மயக்கவியல் மருத்துவர்களுக்கு நோயாளியை ASA Scale என்று தரம் பிரிப்பாரகள். ASA 4 உள்ளவர்கள் உயிருக்கு ஆபத்தான நோய்களை உடையவர்கள் அவர்களுக்கு எந்த நேரத்திலும் எதுவும் ஆகலாம் என்ற நிலையாகும். இந்த நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின்போது அதிக அளவிலான வெவ்வொறு துறைச்சார்ந்த மருத்துவ உதவிகள் தேவைப்படும். இவ்வாறான நோயாளிகளை மருத்துவ கல்லுாரியில் வைத்து அறுவை சிகிச்சை செய்வது நோயாளிக்கு நலனுக்கு நல்லதாகும்.
.
5)   மேற்கூறியவை தவிர ஒவ்வொரு துறையினரிடமும் நோயாளியை உயர்தர சிகிச்சைக்காக மருத்துவ கல்லுாரிக்கு அனுப்பவதற்கு தனித்தனி காரணங்கள் இருக்கும். உதாரணமாக கேன்சர் அறுவை சிகிச்சைக்கு அரசு மருத்துவ கல்லுாரிகளில் தனித்துறை இயங்கி வருகின்றது. அங்கு அதற்கென சிறப்பாக முதுநிலை கேன்சர் அறுவை சிகிச்சை மருத்துவர்கள், கேன்சர் மருத்துவர்கள் மற்றும் கதீர்வீச்சு சிகிச்சை ஆகியவை உள்ளது. ஆக, இவ்வாறான அறுவை சிகிச்சைகளுக்கு பல நேரங்களில் நோயாளிகளை அரசு  மருத்துவ கல்லுாரிக்கு அனுப்பவது என்பதுதான் நோயாளியின் நலன் கருதி சரியானதாகும்.
.
இப்போது உங்களுக்கு ஒரளவு ஏன் நோயாளிகளை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இருந்து அருகில் உள்ள அரசு  மருத்துவ கல்லுாரிகளுக்கு மாறுதல் செய்யப்படுகின்றார்கள் என்ற விபரம் புரிந்திருக்கும். ஒரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் மாதம் 200-க்கு மேல் அறுவை சிகிச்சை நடைபெறும் நிலையில் ஒரு குறிப்பிட்ட சில  நோயாளிகளை மட்டுமே மருத்துவ கல்லுாரிக்கு ஏன் மாறுதல் செய்கின்றார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு அனைத்து நோயாளிகளும் ஒன்றே. அவர்கள் சாய்வு மன்பான்மையுடன் என்றுமே செயல்படுவதில்லை.
.

ஒவ்வொரு மருத்துவரும், தன்னிடம் வரும் நோயாளி சிறப்பாக சிகிச்சை எடுத்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்றுதான் நினைப்பார். ஆக, அவர் ஒரு நோயாளியை மருத்துவ கல்லுாரிக்கு மாறுதல் செய்தால், அது நோயாளியின் நன்மைக்காக என்று நோயாளியும் அவரது உறவினர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
.
மாறுதல் செய்ய வேண்டிய சட்டப்படியான கடமையை பார்ப்போம்.

மத்திய நுகர்வோர் ஆணையம், உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றம் பல் முக்கிய வழக்குகளில் ஒரு மருத்துவமனையில் நோயாளிக்கு தேவைாயான வசதிகள் இல்லாத நிலையில் அங்கு வைத்து வைத்தியம் பாரக்க கூடாது என்று விளம்பியுள்ளது. உதாரணமாக ஒரு வழக்கில், எங்கு 24 மணி நேரம் இருதய சிறப்ப மருத்துவர் இல்லையோ, அங்கு இருதய நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தது தவறு என்று எடுத்துரைத்துள்ளது. அவ்வாறு நோயாளிக்கு தேவையான மருத்துவ வசதி இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை செய்து அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படின் அது மருத்துவ சேவை குறைபாடு என்று சொல்லியுள்ளது.
.
அரசே .அடுக்கு முறையில், அதாவது ஆரம்ப சுகாதார நிலையம், அதற்கு பிறகு தாலுகா அரசு மருத்துவமனை, பின்னர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் கடைசியாக மருத்துவ அரசு கல்லுாரி என நோயாளிகளுக்காக உயர்தரசேவை வழங்கி வரும் நிலையில், நோயாளியின் நலன் கருதி நோயாளியை மருத்துவ கல்லுாரிக்கு மாறுதல் செய்வது என்பதுதான் சரியானதாகும்.
.
பல நேரங்களில் அரசு மருத்துவர்கள் கேட்கும் கேள்வி – நாங்கள் மருத்துவ கல்லுாரிக்கு மாறுதல் செய்தாலும், எங்கள் நிர்வாக அதிகாரிகள் அந்த நோயாளிக்கு மாவட்ட அரசு மருத்துவமனையில்தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கின்றார்கள் என்பதாகும். நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரின் முடிவை யாராலும் கேள்வி கேட்க அதிகாரமில்லை. அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று வைத்தியம் செய்தால், வைத்தியம் அளித்த அரசு மருத்துவரே பொறுப்பாவார். அந்த நேரத்தில் இங்குதான் வைத்தியம் செய்ய வேண்டும் என்று சொன்ன நிர்வாகிகள் உதவிக்கு வரமாட்டார்கள்.   சிலநேரங்களில், சில நிர்வாகிகள் நான் எழுத்து மூலமாக தருகின்றேன், அந்த கேஸை இங்குதான் எடுக்க வேண்டும் என்றாலுமே, ஒரு அரசு மருத்துவரின் கடமை அவரது நிர்வாகியின் ஆணையை மறுத்து நோயாளியின் நலன் கருதி உயர்நல சிகிச்சைக்காக மாறுதல் செய்வதுதான்.
.
இவ்வாறு நோயாளிகளை மாறுதல் செய்யும்போது ஏன் மருத்துவர்கள் பிரச்சனைகளை நோயாளிகளிடம் இருந்து சந்திக்க்கின்றார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

1)   நோயாளி அறுவை சிகிச்சைக்கு வந்தவுடன் அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை அந்த மருத்துவமனையில் பண்ணமுடியுமா என்று அறுவை சிகிச்சை மருத்துவர் உடனடியாக தீர்மானிக்க வேண்டும். அவரது தரப்பில் இருந்து பண்ணமுடியும் என்றால்  உடனடியான அனைத்து டெஸ்டுகளையும் செய்து மயக்கவியல் மருத்துவரிடம் தாமதிக்காமல் முன் பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
.
2)   அவரது உடல்நிலை மாவட்ட அளவிலான மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய தோதுவானதாக இல்லை என்றால்,  அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் மயக்கவியல் மருத்துவர்கள் நோயாளிக்கு பொறுமையாக அவரது உடல்நிலையை விளக்கி, உயர்தர சிகிச்சையின் அவசியத்தை எடுத்து கூறவேண்டும். பொறுமையாக எடுத்து சொன்னாலயே 90 சதவீதம் நோயாளிகள் மருத்துவர் சொல்வதை கேட்டு நடப்பார்கள்.
.
3)   துறைச்சார்ந்த மருத்துவர்கள் (உதாரணமாக அறுவை சிகிச்சை மருத்துவர்கள்) அக்கறை எடுத்து நோயாளியை மருத்துவ கல்லுாரிக்கு மாறுதல் செய்ய வேண்டும்.
.
4)   பிரச்சனைகள் எப்போது வருகின்றது என்றால் நோயாளியை அதிக நாட்கள் அரசு மருத்துவமனையில் தங்க வைத்து, மிக தாமதமாக மாறுதல் செய்யும்போது நோயாளிகள் கோபப்படுகின்றார்கள்.
.
5)   மாறுதல் அவசியம் என்று விளக்கி கூறியபிறகும், அவர்கள் மருத்துவமனை நிர்வாக அதிகாரிகளை சந்தித்தால், நிர்வாக அதிகாரி மாறுதல் செய்ய சொன்ன மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு, நோயாளியிடம் பொறுமையாக உயர்தர சிகிச்சையின் அவசியத்தை எடுத்து கூறவேண்டும்.

அடுத்த முறை அரசு மருத்துவமனைக்கு உங்கள் உறவினர்களை கொண்டு சென்று, அவர்களை மருத்துவ கல்லுாரிக்கு மருத்துவமனை நிர்வாகம் மாறுதல் செய்தால், அது உங்கள் உறவினரின் நன்மைக்காகத்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இது சம்பந்தமாக மருத்துவர்களிடம் முழு விபரங்களையும் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு உயர்தர சிகிச்சையின் அவசியத்தை எடுத்துரைப்பார்கள்.  தமிழக அரசானது அரசு மருத்துவமனைகளில் சிறப்பான மருத்துவ சேவையை பொது மக்களுக்கு நினைவில் கொள்ள வேண்டும்.

கடைசியாக, மாறுதல் செய்வது  என்பது அவசர சிகிச்சை நோயாளிக்கு பொருந்தாது. அவசர சிகிச்சை நோயாளி எந்த நிலையில் இருந்தாலும், அவரது உயிரை காப்பாற்றுவதற்காக அந்த அரசு மருத்துவமனையில், நோயாளி மற்றும் அவரது உறவினர்களிடம் நோயாளியின் நிலையை விளக்கிகூறி அவர்கள் ஒப்புதல் பெற்று சிகிச்சை அளிப்பது மிக அவசியம்.
.
இந்த மீள்பதிவை பொறுமையாக படித்ததிற்கு மிகுந்த நன்றி.  


No comments:

Post a Comment