Pages

Wednesday 28 June 2023

வழக்கறிஞர்களே, இலவச சட்ட ஆலோசனையை தவிருங்கள்

 ஒரு மருத்துவரிடம் சென்று உங்கள் உடல் பிரச்சனைகள கூறி, அவர் அதற்கு உரிய ஆலோசனை வழங்கி, அவர் மருந்துகள் எழுதி கொடுத்த பிறகு என்றாவது, பீஸ் கொடுக்காமல் வெளியே வருகின்றீர்களா?

.
ஆனால், ஒரு வழக்கறிஞரிடம் மட்டும் ஆலோசனை என்ற பெயரில் வந்து உங்கள் பிரச்சனைகளுக்கான தீர்வு முழுவதையும் கேட்டுவிட்டு, இன்னும் ஒரிரு நாட்களில் எல்லா ஆவணங்களையும் கொண்டு வருகின்றேன் என்று கூறிவிட்டு, பின்னர் முதல் வழக்கறிஞரிடம் பெற்ற சட்டப்புரிதலை கொண்டு, இரண்டாம் வழக்கறிஞரிடம் சென்று தனக்கு சற்று சட்டம் தெரியும் என்று காட்டிக்கொண்டு, மிச்சமீதி சந்தேகங்களையும் தீர்த்துவிட்டு, பிரச்சனைக்கான எல்லா தீர்வும் தெரியும் என்று காட்டிக்கொண்டு, குறைந்த பீஸ் கொடுத்து வழக்கை நடத்த முயற்சிக்கின்றார்கள் அல்லது சுய வழக்காளியாக வழக்கை நடத்த முயற்சிக்கின்றார்கள்.
.
இன்று டெல்லி போன்ற இடஙகளில் ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனைக்கு சென்றாலே, முதலில் கன்சல்டிங் பீஸ் கொடுக்க வேண்டும். மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனைக்கு செல்லும் நபர், அவருக்கு பீஸ் கொடுக்க தயாராக இருக்கும்போது, வக்கிலுக்கு மட்டும் தங்களது ஆலோசனைக்காக பீஸ் கொடுக்க ஏன் மறுக்கின்றார்கள்?
.
இந்த நிலைக்கு என்ன காரணம்? எந்த மருத்துவராவது பேஸ்புக்கில் மருத்துவ ஆலோசனை வழங்குகின்றேன் என்று முன் வருகின்றார்களா? கிடையாது. அவர்களின் மருத்துவ அறிவுதான் அவர்களின் தொழிலுக்கான மூலதனம். அதை ஏன் அவர்கள் சமூக ஊடகங்களின் வழியாக எந்தவித பிரதிபலன் இன்றி மற்றவர்களுக்கு கொண்டு செல்லவேண்டும்? அவ்வாறு ஒரு வேளை மருத்துவர்கள் செய்ய ஆரம்பித்தால், அந்த மருத்துவ தொழிலுக்கான மேன்மை குறையும் மற்றும் நிறைய போலி மருத்துவர்கள்தான் உருவாவார்கள்.
.
ஆனால், இன்று சில வழக்கறிஞர்கள் தங்களின் சட்டப்புரிதலையும் அறிவினையும் சமூக ஊடகங்களில் இலவசமாக வழங்கி வருகின்றார்கள். இவ்வாறான செயல்களினால், அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கலாம், ஆனால் வழக்கறிஞர் தொழில் சார்ந்த அனைத்தும் இலவசமாக சென்றடையும்போது, சுய வழக்காளிகள் உருவாவதால், வழக்கறிஞர் தொழிலானது கால போக்கில் அதன் மேன்மையை இழக்க தொடங்கும். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது. சுய வழக்காளிகள் தங்கள் வழக்குகளை நடத்துவதை நான் குறை கூறவில்லை. ஏனெனில் இவ்வாறான சுய வழக்காளிகளிடம் கேட்டால், அவர்கள் பெரும்பாலும் அவர்களது வழக்கறிஞர்களால் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டதாகவே கூறுவார்கள். சுய வழக்காளிகள் உருவாகின்றார்கள் என்றால், வழக்கறிஞர்கள் மீது பொது மக்களுக்கான நம்பிக்கை குறைவதாக அர்த்தம் கொள்ள வேண்டும். அதற்கு வழக்கறிஞர்கள் இடம் கொடுக்காமல், தங்களது கட்சிக்காரரின் நம்பிக்கையை அனைத்து நேரங்களிலும் பெற தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
.
சமூதாயத்தில் சட்ட புரிதலை உருவாக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. பள்ளிப்பாடங்களில் சட்டப்படிப்புகளை குறிப்பாக ஒருவரின் உரிமை சார்ந்த விஸயங்களை குழந்தை பருவத்திலிருந்தே சொல்லி தரவேண்டும். வழக்கறிஞர்கள் அதிக பட்சம் ஒருவரின் உரிமைகளையும் கடமைகளை பற்றி மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.
.
ஆனால், நீதிமன்றம் சென்று ஒரு வழக்கறிஞர் மூலமாக தீர்வு பெற வேண்டிய முக்கியமான சட்டப்பிரச்சனைகளுக்கும், சமூக ஊடகத்தின் வாயிலாக ஆலோசனை வழங்கினால், வழக்கறிஞர்களை நாடி வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து, வழக்கறிஞர்களின் தொழிலானது நசித்து போய்விடும் என்பதை நினைவில் கொண்டு சட்டப்பிரச்சனைகளுக்கு சமூக ஊடகங்களின் வழியாக தீர்வு சொல்வதை வழக்கறிஞர்கள் தவிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment